ஒரு வாரம் தள்ளிப்போன ‘அன்பில் அவன்’ – அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!

6

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் தள்ளிப்போய் அக்டோபர் 2, 2026 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பரப் பணிகளுக்கு ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து கிடைத்து வரும் வரவேற்புக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. அனைத்து தளங்களிலும் திரைப்படத்துக்கு கிடைத்து வரும் ஆதரவும், விநியோக கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள ஆர்வமும் படத்தை இன்னும் பெரிய அளவில் வெளியிடுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து பகுதிகளிலும் படத்தை சிறப்பான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டபடி செப்டம்பர் 25-ம் தேதிக்கு பதிலாக, அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் ‘அன்பில் அவன்’ திரையரங்குகளில் வெளியாகிறது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மிகுந்த அன்புடனும் அர்ப்பணிப்புடனும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படத்தை அதன் பிரம்மாண்டம், வெளியீட்டு வீச்சு மற்றும் தரத்துக்கு ஏற்ற வகையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த ஒரு வார கால அவகாசம் அவசியமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

அய்ங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் சார்பில் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார்.

ரசிகர்களின் தொடர்ந்த அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து, அக்டோபர் 2, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை சந்திக்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.