இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருது ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு வழங்கப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை விழாவில் நேரில் பெற்றுக்கொண்டார்.
அதே திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கும் Special Mention தேசிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஒரே திரைப்படத்திற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கும், படத்தின் முன்னணி நடிகருக்கும் ஒரே தேசிய விருது விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’, அதன் கதைக்களம் மற்றும் சமூகப் பார்வைக்காக தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. திரைப்படத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான தனுஷின் நடிப்புக்கும் Special Mention வழங்கப்பட்டிருப்பது படத்தின் தேசிய அங்கீகாரத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது.
‘கேப்டன் மில்லர்’ மூலம் கிடைத்துள்ள இந்த தேசிய விருது, சத்யஜோதி பிலிம்ஸின் நீண்ட திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது. மூன்று தலைமுறைகளாக திரைப்படத் தயாரிப்பில் பயணித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ், பல்வேறு காலகட்டங்களில் தரமான கதைகளையும் கலைநயம் கொண்ட படைப்புகளையும் தமிழ் சினிமாவுக்கு வழங்கி வந்துள்ளது.
1959-ம் ஆண்டு வெளியான ‘கல்யாண பரிசு’ திரைப்படம் முதல் சத்யஜோதி பிலிம்ஸின் பயணம் தமிழ் சினிமாவின் முக்கியமான காலகட்டங்களுடன் இணைந்து தொடர்கிறது. ‘கல்யாண பரிசு’ தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய அங்கீகாரத்தை பெற்றதுடன், ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
தொடர்ந்து ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றதுடன், நடிகர் கமல்ஹாசனின் முதல் தேசிய விருதிற்கும் காரணமாக அமைந்தது. இவ்வாறு பல தலைமுறைகளாக தேசிய அளவிலான அங்கீகாரங்களுடன் பயணித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸின் பாரம்பரியத்தில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் தேசிய விருதும் இணைந்துள்ளது.
காலத்திற்கு ஏற்ற கதைகளையும், வெவ்வேறு களங்களில் உருவாகும் திரைப்படங்களையும் தொடர்ந்து தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ், ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ பெற்றுள்ள தேசிய விருது, நிறுவனத்தின் நீண்டகால திரைப்படப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
மூன்று தலைமுறைகளாக திரைப்படத் தயாரிப்பில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சத்யஜோதி பிலிம்ஸுக்கு, ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் ஒரு தனிப்பட்ட திரைப்படத்தின் சாதனையைத் தாண்டி, பல ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுத்து வரும் திரைப்படப் பயணத்திற்குக் கிடைத்துள்ள பெருமையாக அமைந்துள்ளது.
இந்த தேசிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ், அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவினருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
ஏழு தசாப்தங்களை நெருங்கும் தனது திரைப்பயணத்தில் பல தலைமுறைகளைக் கடந்து சினிமாவை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சத்யஜோதி பிலிம்ஸின் தேசிய அங்கீகாரப் பட்டியலில், தற்போது ‘கேப்டன் மில்லர்’திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த விருது நிறுவனத்தின் பாரம்பரியத்தை கொண்டாடுவதோடு, அதன் எதிர்கால படைப்புகளுக்கான புதிய உத்வேகமாகவும் அமைந்துள்ளது.