கிரைம் டிராமாவில் LK அக்ஷய் குமார்… புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

6

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக உருவாகும் இப்படம், கிரைம் டிராமா ஜானரில் உருவாகிறது. படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L.K. விஷ்ணு குமார்இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன்ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் முன்னணி இயக்குநர் H. வினோத் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். H. வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், தற்போது இப்படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்குகிறார்.

இப்படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R.S. துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல், தயாரிப்பாளர்கள் R.K. செல்வமணி, T. சிவா, G. தனஞ்ஜெயன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், அருண் விஸ்வா, சபரி, விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன் R கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பை ஆர்த்தி நீலகிருஷ்ணன் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக P.S. ஹரிஹரன் பணியாற்றுகிறார். விளம்பர வடிவமைப்பை அம்பானி (ADFX) கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ஆக்ஷன் சந்தோஷ் அமைக்கிறார். நிர்வாக தயாரிப்பாளராக மணிகண்டன், கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அருண் K பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. வெவ்வேறு களங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் மையமாகக் கொண்டு உருவாகும் இந்த கிரைம் டிராமா, வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

‘சிறை’ படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்ற LK அக்ஷய் குமார், தொடர்ந்து ‘ராவடி’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அவர் நடித்திருந்த நிலையில், அப்படத்தின் டீசர் மற்றும் புரமோஷன் காட்சிகளும் ரசிகர்களிடையே கவனம் பெற்றன.

இந்நிலையில், ‘ராவடி’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தில், கிரைம் டிராமா கதைக்களத்தில் LK அக்ஷய் குமார் நடிக்கிறார். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து தேர்வு செய்யாமல், ஒவ்வொரு படத்திலும் புதிய களத்தையும் கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து வரும் அவரது பயணத்தில், இந்தப் புதிய திரைப்படமும் மற்றுமொரு வித்தியாசமான படைப்பாக அமையவுள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.