ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’ – புதிய கிரைம் திரில்லர்!

22

பிரபல கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. ‘வயலெட் கனவு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எம் 4 இண்டர்நேஷ்னல் வழங்குகிறது. அப்பு மூவிஸ் சார்பில் திருமதி ஏ. முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை பி. நித்யானந்தன் B.A.D.F.T இயக்குகிறார்.

‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அங்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ரெய்னா, கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர். அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கிரைம் மற்றும் மர்மத்தை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ஜெகன் கல்யாண் இசையமைக்கிறார். கீதாகரண் B.V.A ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஏ.எம். சயீப் B.V.A படத்தொகுப்பு செய்கிறார். ஸ்ரீதர் கலை இயக்குநராகவும், பாஸ்கர் ராஜ் வசனகர்த்தாவாகவும் பணியாற்றுகின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகளை ஏ.எக்ஸ்.என். பிரகாஷ் வடிவமைக்கிறார். நடனக் காட்சிகளை சவால் ராம் அமைக்கிறார். அசோக் ஆடை வடிவமைப்பாளராகவும், பிரேமா ஒப்பனைக் கலைஞராகவும் பணியாற்றுகின்றனர். கே. தங்கராஜ் நிர்வாக தயாரிப்புப் பணிகளை கவனிக்கிறார். துரை விநாயகமூர்த்தி கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். தர்மதுரை மற்றும் சுரேஷ்சுகு மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்களை எழுதி, தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் ராஜேஷ்குமார். அவரது படைப்புகள் திரைப்படங்களாகவும், வலைத்தொடர்களாகவும் உருவாகி வரும் நிலையில், அவரது முக்கியமான கிரைம் திரில்லர் நாவலை மையமாகக் கொண்டு ‘வயலெட் கனவு’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இதுவரை திரையில் பார்த்திராத வித்தியாசமான கிரைம் திரில்லர் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் பணியாற்றும் அனைவரும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்பதால், அவர்களின் புதிய தலைமுறை அணுகுமுறை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கதைக்களம் மற்றும் திரைக்கதை குறித்த முக்கிய தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ள நிலையில், கிரைம், மர்மம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய படமாக ‘வயலெட் கனவு’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலரை பிரம்மாண்டமான முறையிலும், வித்தியாசமான அணுகுமுறையிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ராஜேஷ்குமாரின் கிரைம் கதை சொல்லும் பாணியுடன், திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதிய தலைமுறை சினிமா அணுகுமுறையும் இணைந்திருப்பதால், ‘வயலெட் கனவு’ கிரைம் திரில்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.