இந்தியாவில் வசூலில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’!

7

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கு இந்தியாவில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வசூலைப் பதிவு செய்துள்ளது. ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் தற்போது மறு வெளியீடாக ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மீண்டும் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த ‘அவெஞ்சர்ஸ்’ தருணங்களை ரசிக்க ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டுள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி வரவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் மோஜோ தரவுகளின்படி, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ திரைப்படம் முதல் வார இறுதியில் உலகளவில் சுமார் 86 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வட அமெரிக்காவில் 26 மில்லியன் அமெரிக்க டாலரும், சர்வதேச சந்தைகளில் 60 மில்லியன் அமெரிக்க டாலரும் வசூலாகியுள்ளன.

மறு வெளியீடு செய்யப்பட்ட திரைப்படங்களின் உலகளாவிய தொடக்க வசூலைப் பொறுத்தவரை, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ திரைப்படம் இரண்டாவது அதிகபட்ச தொடக்க வசூலைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகளவில் இப்படத்திற்கு அதிக வசூல் பங்களிப்பு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் வார இறுதியில் இந்தியாவில் சுமார் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா 26 மில்லியன் டாலர், சீனா 13.5 மில்லியன் டாலர், இங்கிலாந்து 5.4 மில்லியன் டாலர் மற்றும் மெக்சிகோ 4.3 மில்லியன் டாலர் என இந்தியாவுக்கு முன்னிலையில் உள்ளன.

மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரசிகர்கள் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் தங்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் பெரிய திரையில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கேப்டன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘Avengers, Assemble’ தருணம் முதல் அயர்ன் மேனின் உணர்வுப்பூர்வமான இறுதி தியாகம் வரையிலான காட்சிகளுக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ திரையிடப்பட்டு வருகிறது. மேலும், IMAX மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் அறிமுகப்படுத்தியுள்ள ‘Infinity Vision’ எனப்படும் புதிய Premium Large Format (PLF) திரை அனுபவத்திலும் இப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் படத்தை மேலும் பிரம்மாண்டமான திரை அனுபவத்தில் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு மறு வெளியீட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக, இந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்துடன் தொடர்புடைய கூடுதல் காட்சிகளும் ‘எண்ட்கேம் – என்கோர்’ திரையிடலில் இடம்பெற்றுள்ளன.

இதனால், பழைய நினைவுகளை மீண்டும் கொண்டாடும் ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ ஒரு சிறப்பு திரையரங்கு அனுபவமாக அமைந்துள்ளதுடன், அடுத்த ‘அவெஞ்சர்ஸ்’ படமான ‘டூம்ஸ்டே’ மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.