சென்னையில் ‘தி புட்டு’ புதிய கிளை – திலீப், காவ்யா மாதவன் தம்பதியினர் தொடக்கம்!

6

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் இணைந்து நடத்தி வரும் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் புதிய கிளை சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பாரம்பரிய உணவுகளையும், மண்ணின் கலாச்சார சுவையையும் மாறாமல் வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ‘தி புட்டு’ உணவகத்திற்கு கேரளாவில் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் கிளைகள் உள்ளன. தற்போது சென்னையில் உள்ள மலையாளிகளுக்கும், கேரள உணவுகளை விரும்பும் உணவு பிரியர்களுக்கும் பாரம்பரிய கேரள சுவையை அறிமுகப்படுத்தும் வகையில் அண்ணா நகரில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.

புதிய கிளையின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர்கள் அசோகன், ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் அசோகன், ரியாஸ் கான், நடிகைகள் மீனா, ஷாரதா, ஷீலா, சீமா, ராதிகா சரத்குமார், மிர்னா, பூர்ணிமா பாக்யராஜ், கிகி விஜய் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், இயக்குநர் பிரியதர்ஷன், சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின், தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி, சிவா, விஜயகுமார், ரவி கொட்டாரக்கரா, Seven Arts விஜயகுமார், Prince Pictures வெங்கடேஷ், ஏ.வி. அனூப், மினி ஸ்டூடியோ வினோத் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பாடகர்கள் ராகேஷ் பிரம்மானந்தன், சுஜாதா மோகன், நடன இயக்குநர்கள் கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் கனல் கண்ணன் மாஸ்டர், மாஃபியா சசி மாஸ்டர், ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஞ்சன், டாக்டர் சைதன்யா, டாக்டர் கே. கிரீஷ் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

‘தி புட்டு’ உணவகத்தின் முக்கிய அடையாளமாக 80 வகையான புட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதனுடன் கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. புட்டை மையமாகக் கொண்டு பல்வேறு வகையான உணவுகளை அறிமுகப்படுத்தியிருப்பது இந்நிறுவனத்தின் தனித்துவமாக பார்க்கப்படுகிறது.

இந்த உணவகத்தின் கிளைகள் வளைகுடா நாடுகளான துபாய், சார்ஜா, ஜெட்டா மற்றும் தோஹா உள்ளிட்ட இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் விரிவடைந்துள்ள ‘தி புட்டு’ தற்போது சென்னையிலும் தனது கிளையை தொடங்கியுள்ளது.

சென்னை கிளையின் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கேரள உணவுகளை விரும்பும் உணவு பிரியர்களுக்கு, குறிப்பாக புட்டை பல்வேறு வகைகளில் ருசிக்க விரும்புவோருக்கு, அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய கிளை மற்றொரு உணவு அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.