பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் மீண்டும் இணைந்துள்ள ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் வித்தியாசமான கதைக்களம் மற்றும் நகைச்சுவை கலந்த திரைக்கதையால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்தது. குறிப்பாக, நடிகர் ஆதி நடித்த கதாபாத்திரமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானது முதலே ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகரித்து வந்தது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவனே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இரண்டாம் பாகத்தில் கதைக்களம் மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இயக்குநர் பணியாற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
‘மரகத நாணயம் 2’ படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். தீபக் மேனன் மற்றும் பி.வி. சங்கர் ஆகியோர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். என்.கே. ராகுல் கலை இயக்குநராக பணியாற்ற, திருமலை ராஜன் ஆர். படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ராஜேஷ் கண்ணன் வசனங்களை எழுதியுள்ளார். பி.சி. ஸ்டண்ட்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆதி – ஏ.ஆர்.கே. சரவன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மரகத நாணயம் 2’ திரைப்படம், முதல் பாகத்தைத் தொடர்ந்து ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

