லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு காணொளி வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை கே. மனோஜ் குமார் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்கிறார்.
ட்ராமா திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் சார்பில் லோகேஷ் கனகராஜ், நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் அறிவிப்பு காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது.
ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களின் கூட்டணி, விஷால் வெங்கட்டின் இயக்கம், நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பு என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
