‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… சமூகத்தின் குரல்! – திரையுலகினர் பாராட்டு

7

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், “‘டோரதி’ படத்தை சிறந்த அனுபவமாக மாற்றிய ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.

திருநர் சமூகத்திற்காக கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஷபிதா, ‘டோரதி’ திரைப்படம் தன்னை மிகவும் நெகிழ வைத்ததாகத் தெரிவித்தார். திருநர் சமூகத்தின் குரலாக இப்படம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் வந்திருந்தாலும் ‘டோரதி’ எப்போதுமே ஸ்பெஷல். எங்கள் சமூகத்தின் குரலாக இந்தப் படம் உள்ளது. திருநர் சமூகம் இன்னும் பல உயரங்களுக்கு செல்லும் என்பதற்கு இந்தப் படம் சாட்சி” என்றார்.

மாளவிகா பேசுகையில், “கார்த்தி – ஹீரோ, சுப்பு – ஹீரோயின், ராஜ் – இளையராஜா சார் என கார்த்திக் சுப்புராஜாக இணைந்து ‘டோரதி’ உருவாகியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். ரிஷிகாந்த், சனந்த் என இரண்டு அற்புதமான நடிகர்களை கார்த்திக் சுப்புராஜ் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்த வருடம் நமக்கு கிடைத்த பரிசு ‘டோரதி’. இந்தப் படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும்” என்றார்.

சுபா தனது உரையில், “‘டோரதி’ இந்த சமூகத்திற்கான ஒரு புரட்சி. கடந்த காலங்களில் திருநர் சமூகத்தை மையப்படுத்தி பல சிறப்பான படங்கள் வந்துள்ளன. ஆனால், ஜென்ஸீ காலத்தில் ‘டோரதி’ பேசியிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது. 2050 வரை சிந்திக்க வைக்கும் படமாக இது வெளியாகியுள்ளது. வியாபார நோக்கத்தைத் தாண்டி சமூக நோக்கத்துடன் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ளார். சனந்த், ரிஷிகாந்த் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது” என பாராட்டினார்.

இயக்குநர் வசந்தபாலன், “ஆணாதிக்கம், மாஸ் என நினைத்து பல தவறான விஷயங்களை சினிமாவில் திணித்து வருகிறோம். அதற்கெல்லாம் சம்பட்டியில் அடித்தாற்போல ‘டோரதி’ வந்திருக்கிறது. ரோமியோ – ஜூலியட் போல ‘டோரதி’யும் அற்புதமான காதல் படம். இந்தப் படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்க வேண்டும். ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். ராஜா சார் தனது இசையால் இந்தப் படத்தை ஆசீர்வதித்திருக்கிறார்” என்றார்.

இயக்குநர் சசி, “‘டோரதி’ திரைப்படம் வெளியாகியிருப்பதன் மூலம் நான் ஒரு தமிழ் சினிமா இயக்குநர் என்பதில் பெருமை கொள்கிறேன். மூன்றாம் பாலினத்தவருக்காக ஒரு படம் செய்ய வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் முன்வந்திருப்பது மிகப்பெரிய விஷயம். அவர் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும்” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “பேரன்பும் தைரியமும் கொண்ட ஒருவரால் மட்டுமே ‘டோரதி’ போன்ற ஒரு படத்தை எடுக்க முடியும். அந்த இரண்டும் கார்த்திக் சுப்புராஜிடம் இருக்கிறது. நான் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தேன். பேரன்போடு இந்தப் படத்தை எடுத்த கார்த்திக் சுப்புராஜை வாழ்நாள் முழுவதும் கொண்டாடலாம். ராஜா சாரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ரஜினி – கமல் போல ரிஷி – சனந்த் வளர வேண்டும்” என வாழ்த்தினார்.

இயக்குநர் மிஷ்கின் தனது உரையில், “‘டோரதி’ திரைப்படம் மூலம் திருநர் சமூகத்தை மிக உயர்ந்த இடத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் எடுத்துச் சென்றுள்ளார். சீர்கெட்ட சமூகத்தை இந்தப் படத்தின் மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார். வசூலைத் தாண்டி சிறந்த படமாக இது காலத்திற்கும் நிற்கும். நம் எல்லோரையும் விட வாழ்க்கையை நன்கு புரிந்தவர்கள் திருநங்கைகள். சகிப்புத்தன்மையை இந்தப் படம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மாஸ் ஹீரோ டெம்ப்ளேட்டை உடைத்து ரிஷிகாந்த், சனந்த் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தின் உயிராக இருக்கிறார்” என பாராட்டினார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பேசுகையில், “‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றி விழாவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் படம் வெளியாகும் முன்பே பல கருத்து வன்முறைகள் இந்தப் படத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது. ரிஷி, சனந்த் என இரண்டு திறமையாளர்களை இந்தப் படம் கொடுத்துள்ளது. இந்த மிகப்பெரிய வெற்றிப் படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “சினிமா ஒரு வலுவான ஆயுதம். மக்கள் மனதை மாற்றும் சக்தி அதற்கு உள்ளது. திருநர் சமூகத்தை இதுநாள் வரை பார்த்த பார்வையை இந்தப் படம் நிச்சயம் மாற்றும் என பலர் என்னிடம் கூறினார்கள். அதுதான் இந்தப் படத்தின் வெற்றி எனக் கருதுகிறேன். இதை என்னுடைய தனிப்பட்ட வெற்றியாகவும் பார்க்கிறேன். எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சார் இசை. படத்தின் இன்னொரு ஹீரோ திரு சார். அனைவருக்கும் நன்றி” என்றார்.

‘டோரதி’ திரைப்படம் திருநர் சமூகத்தை மையப்படுத்தி மனிதநேயம், காதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமூகப் பார்வை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசியிருப்பதாக நிகழ்வில் கலந்துகொண்ட திரையுலகினர் பாராட்டினர். படக்குழுவினருக்கு தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முக்கிய தருணமாக அமைந்தது.