மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. Arowana Pictures Pvt. Ltd. சார்பில் தீபா சிவாஜி தயாரிக்கும் இப்படத்தில், சத்யா சிவாஜி கதாநாயகனாக நடிக்கிறார். நாகா. KMI எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள CKN கல்லூரியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
படப்பூஜை விழாவில் தயாரிப்பாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன், பிரியங்கா, ரோபோ சங்கர், சோனியா, போஸ் வெங்கட் மற்றும் கந்தசாமி நாயுடுவின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
1885ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்த சி. கந்தசாமி நாயுடு, சிறுவயதில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறாத நிலையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்தவர். சென்னைக்கு வந்து செங்கல் சூளையில் தொழிலாளியாகப் பணியாற்றிய அவர், பின்னர் கொத்தனாராக உயர்ந்து, சொந்தமாகச் செங்கல் சூளை தொடங்கி தனது கடின உழைப்பால் பொருளாதாரத்தில் முன்னேறினார். சாதாரண தொழிலாளியாகத் தொடங்கி சமூகத்தில் மதிக்கத்தக்க செல்வந்தராக உயர்ந்த அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்தது.
தன்னால் கல்வி கற்க முடியாமல் போன ஏக்கத்தை, மற்ற மாணவர்களுக்கும் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்ற சமூக அக்கறையாக மாற்றிக்கொண்டவர் சி. கந்தசாமி நாயுடு. பச்சையப்பா அறக்கட்டளையுடன் இணைந்து கல்விப் பணிகளில் ஈடுபட்டதுடன், தனது சொத்தில் ஒரு பகுதியைக் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார். அவரது பெயரில் 1967-68 கல்வியாண்டில் சென்னை அண்ணாநகரில் ஆண்களுக்கான கல்லூரியும், கடலூரில் பெண்களுக்கான கல்லூரியும் தொடங்கப்பட்டன. இக்கல்வி நிறுவனங்கள் மூலம் பல தலைமுறை மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
அவரது வாழ்க்கைப் பயணத்தில் துணையாக நின்ற மனைவி செல்லம்மாளின் அன்பும் ஆதரவும் அவரது லட்சியங்களை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தன. உழைப்பு, கல்வி மீதான ஆர்வம், சமூக அக்கறை, கொடை உள்ளம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கையையும் அவரது கல்விச் சேவையையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இப்படம் உருவாகிறது. முதற்கட்டமாக அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாகவும், தொடர்ந்து முழுநீளத் திரைப்படமாகவும் உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு பாபு கே. செல்வராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோஸ் பிராங்க்ளின் இசையமைக்கிறார். வி.எம். சந்தோஷ் படத்தொகுப்பையும், ஏ. சதீஷ்குமார் ஒலி வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை Absolute Frames மேற்கொள்கிறது. சரண் கலை வடிவமைப்பையும், ஆர். மணி மதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் கவனிக்கின்றனர். எஸ்.எஸ். சுரேஷ்நிதின் ஸ்டில்ஸ் பொறுப்பை ஏற்றுள்ளார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.








