‘96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு – மீண்டும் திரையரங்குகளில் ராம் – ஜானு காதல்!

9

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் மலர்ந்த காதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் அந்த சந்திப்பின்போது வெளிப்படும் உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் சி. பிரேம்குமார் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனித்துள்ள இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு மற்றும் என். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பை மேற்கொள்ள, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

‘காதலே காதலே’, ‘தி லைஃப் ஆஃப் ராம்’, ‘அந்தாதி’, ‘இரவிங்கு தீவாய்’ உள்ளிட்ட பாடல்கள் படத்தின் உணர்வுகளுடன் இணைந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ‘96’ படத்தின் உணர்வுப்பூர்வமான அனுபவத்தில் முக்கிய பங்கு வகித்தன.

Madras Enterprises சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்துள்ள ‘96’, வெளியான காலகட்டத்திலேயே இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்கள் வரை வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி – திரிஷா இணைந்து உருவாக்கிய ராம் – ஜானு கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தன.

காதல், பிரிவு, நட்பு, பள்ளிப் பருவ நினைவுகள் மற்றும் நிறைவேறாத காதலின் வலி என பல்வேறு உணர்வுகளை இயல்பான திரைக்கதை மூலம் பதிவு செய்த ‘96’, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காதல் திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், ‘96’ திரைப்படம் வரும் அக்டோபர் 9, 2026 முதல் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் மூலம் ஏற்கனவே படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், ராம் – ஜானுவின் காதல் மற்றும் நினைவுகளை மீண்டும் பெரிய திரையில் கொண்டாடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதேபோல், திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய புதிய தலைமுறை ரசிகர்களும் முதன்முறையாக ‘96’ திரைப்படத்தை பெரிய திரையில் ரசிக்க உள்ளனர்.

ராம் – ஜானுவின் காதல் நினைவுகள் மீண்டும் பெரிய திரையில்…
‘96’ – அக்டோபர் 9 முதல் திரையரங்குகளில்!