ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International), ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்க அனுபவங்களையும் ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனர் அபிநயா செல்வம், “படம் வெளியான முதல் நாளிலிருந்தே பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விளம்பரக் குழுவினர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் எனப் படத்தின் வெற்றிக்குப் பங்களித்த அனைவருக்கும் நன்றி. ‘அன்பில் அவன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கிலும் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் ஆப்ரஹாம் பேசுகையில், “ஒரு திரைப்படம் திரையரங்கில் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதில் தங்கி, அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்படத்தை உருவாக்கப் பல சவால்களைச் சந்தித்தோம். ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் உணர்வுபூர்வமான செய்திகள் எங்களுக்குப் பெரிய வெற்றி. அன்பையும் மரியாதையையும் விலைக்கு வாங்க முடியாது; நம்முடைய உழைப்பால் சம்பாதிக்க வேண்டும். காதலையும் கனவுகளையும் பற்றிப் பேசும் இந்தப் படம், பார்வையாளர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் கார்த்திகேயன் தனது உரையில், ரசிகர்கள் படத்துடன் உணர்வுபூர்வமாகத் தொடர்புபடுத்திக்கொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்வது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதுடன், திரைப்படம் மக்களிடம் சரியாகச் சென்றடைவதும் முக்கியம் என்றும், ‘அன்பில் அவன்’ படத்தைப் பொறுத்தவரை இந்த இரண்டும் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, குடும்பத்தை நேசிக்கும் ஆண்களைப் பற்றியும் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் ரசிகர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகள் தங்களை நெகிழச் செய்வதாகக் கூறினார்.
மேலும், தனது முதல் திரைக்கதையை வாசித்துவிட்டு உடனடியாக நம்பிக்கை அளித்த அசோக் செல்வனுக்கு நன்றி தெரிவித்த அவர், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் பயணத்துக்கு ஆதரவாக இருப்பது பாராட்டுக்குரியது என்றும் கூறினார். படத்தின் கதையைத் திரைக்கதையாகச் செம்மைப்படுத்த உதவிய எழுத்தாளர் விக்னேஷ் ராஜ், ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசும்போது, படத்தைப் பற்றிய விமர்சனங்களையும் ரசிகர்களின் கருத்துகளையும் படித்ததாகவும், குறிப்பாகப் பெண்களும் இளம் பெண்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியளித்ததாகவும் தெரிவித்தார். “ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டு, அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்றால் அதுவே மிகப்பெரிய விஷயம். இப்படத்தில் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை ஒரு வரமாகப் பார்க்கிறேன். எதிர்காலத்தில் இந்தப் படத்தைத் திரும்பிப் பார்க்கும்போதும் இதில் நடித்ததற்காகப் பெருமைப்படுவேன்” என்றார். மேலும், படத்தின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் தனது கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நடிகரும் தயாரிப்பாளருமான அசோக் செல்வன் பேசுகையில், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு முதலில் நன்றி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் வெளியானாலும், படம் தொடர்ந்து வளர்ந்து தற்போது லாபகரமான நிலையை எட்டியுள்ளது. காதல் கதையாகத் தொடங்கி, த்ரில்லர், ஆக்ஷன் எனப் பல ஜானர்களில் பயணிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். படத்தில் சில குறைகள் இருக்கலாம்; ஆனால், அதன் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்” என்றார்.
மேலும், படத்தில் பணியாற்றிய ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் கார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் கௌதம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளராகத் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க முடிந்தது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மஹா, கதிர் பாலு, ஆகாஷ், பிரவீன், தீபன் உள்ளிட்ட கலைஞர்களுக்கு இப்படம் புதிய அடையாளத்தை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்வில் பேசிய மற்ற படக்குழுவினரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்கும், படத்தின் உருவாக்கத்தில் ஆதரவளித்த சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர். கலை இயக்குநர் மணிகண்டன், சென்னையிலேயே மூணாறில் இடம்பெற வேண்டிய பல செட்களை அமைத்து, தயாரிப்புச் செலவைக் குறைத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். காஸ்ட்யூம் டிசைனர் பெனிடா, இப்படம் தனது முதல் திரைப்படம் என்றும், இது தனக்குச் சிறந்த கற்றல் அனுபவமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். கிரண் ஹெய்ன், கதிர் பாலு, ஆகாஷ், மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் படக்குழுவினருக்கும் ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி கூறினர்.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அன்பில் அவன்’, காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்துக்குக் கிடைத்து வரும் ஆதரவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, படக்குழுவினரின் மகிழ்ச்சியையும் அடுத்தகட்டப் பயணத்தின் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.





