சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – அக்டோபர் 23-ல் திரைக்கு வரும் லியோ சிவக்குமாரின் படம்!

7

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டுள்ளார். இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அம்மா – மகன் இடையேயான அழகான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளுடன் தொடங்கும் டிரைலர், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் டிரைலர் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்துகிறது. குடும்ப உணர்வுகளுடன் குற்றச் சம்பவங்களும் இணைந்திருப்பது கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

அம்மா – மகன் பாசம், காதல், அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை என ஒரு கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. உணர்வுபூர்வமான தருணங்களுக்கு இடையே இடம்பெறும் அதிரடி காட்சிகளும், காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றன. ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் அவரை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்ற கேள்வியையும் டிரைலர் எழுப்புகிறது.

இப்படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். லியோ சிவக்குமாரின் தாயாக ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Chaandi Talkies சார்பில் லெனின் மாதேஸ்வரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளனர். ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பையும், பி. ஜெய் முருகன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைப் பயிற்சியை ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொண்டுள்ளார். இயக்குநர் நானி இயக்குநராக அறிமுகமாகும் படமாகவும் ‘டெலிவரி பாய்’ அமைந்துள்ளது.

குடும்பப் பாசம், காதல், ஆக்ஷன், காமெடி எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய ‘டெலிவரி பாய்’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Trailer