25 மாணவர்களுக்கு உதவித்தொகை; ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் விருது – சிவகுமார் அறக்கட்டளை விழா!

1

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் விருதும், விளிம்புநிலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வரும் மூன்று அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டன. மொத்தமாக ரூ.13.78 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

47 ஆண்டுகளாகத் தொடரும் கல்விச் சேவை!

திரைக்கலைஞர் சிவகுமார், தனது 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையின் மூலம் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் 1979-ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் தனது சொந்த நிதியிலிருந்தும் கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். 2006-ஆம் ஆண்டு முதல் அகரம் ஃபவுண்டேஷன் இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது.

ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் விருது!

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், ஓவியத் துறையில் நீண்டகாலமாகச் சிறப்பாகப் பங்களித்து வரும் மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில், சிவகுமார் கல்வி அறக்கட்டளை ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கி வருகிறது.

இதுவரை ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில், 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை!

பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியருக்கு, தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2.50 லட்சம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. அவர்களின் சாதனைகளைப் பாராட்டிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மூன்று கல்வி அமைப்புகளுக்கு நிதியுதவி!

விளிம்புநிலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வரும் மூன்று அமைப்புகளின் சேவையைப் பாராட்டி அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

திண்டிவனம் ரோசனை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தாய்மொழிக் கல்வியை முன்னிறுத்தி இலவசக் கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டத்தை வழங்கி வரும் ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளி’க்கு, 2026–2027 கல்வியாண்டில் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ.6.28 லட்சம் வழங்குவதற்கான உறுதியேற்புக் கடிதம் அளிக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக அகரம் ஃபவுண்டேஷன் இப்பள்ளிக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ‘சுடர்’ அமைப்புக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்கும், மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கும் இவ்வமைப்பு 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறது. இதற்கான காசோலை, அமைப்பின் நிறுவனர் நடராஜனிடம் வழங்கப்பட்டது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள ஏழு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்துக் கல்வி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘வாழை’ அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கான உறுதியேற்புக் கடிதம் அளிக்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

“கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் எங்கும் சாதிக்கலாம்” – சிவகுமார்

விழாவில் மாணவர்களைப் பாராட்டிப் பேசிய திரைக்கலைஞர் சிவகுமார், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் சாதிக்க முடியும் என்று தெரிவித்தார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் அல்லது கிராமப்புறங்களில் வளர்ந்தவர்கள் என எந்தப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கல்வியிலும் ஒழுக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தனது சிறுவயது கல்விப் பயணத்தை நினைவுகூர்ந்த அவர், முறையான பள்ளிக் கட்டடம் மற்றும் வசதிகள் இல்லாத சூழலில் படித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். கிராமத்தில் இருந்த மண்டபத்தில் தூசி பறக்காமல் இருக்கச் சாணம் கொண்டு தரையை மெழுகி, அங்கேயே அமர்ந்து படித்ததாகக் குறிப்பிட்டார். தனது தந்தை மறைந்த பிறகு, விவசாயத்தில் உழைத்து வந்த தாயின் கடின உழைப்பால்தான் கல்வி கற்க முடிந்ததாகவும், பொருளாதாரச் சிரமத்தால் தனது அக்கா மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உருக்கமாகப் பேசினார்.

ஏழ்மையான குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் கல்விக்காக எதிர்கொள்ளும் சிரமங்களைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகக் குறிப்பிட்ட சிவகுமார், தடைகளைத் தாண்டி மாணவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களின் வாழ்க்கையில் புதிய தொடக்கமாக அமையும் என்றார். மாணவர்கள் தங்கள் இலக்கில் உறுதியாக இருந்து, ஒழுக்கத்துடனும் கவனம் சிதறாமலும் தொடர்ந்து உழைத்து, தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“வாழ்க்கையில் எப்போதும் ‘ஒன் மோர்’ என்று சொல்லுங்கள்” – சூர்யா

விழாவில் பேசிய நடிகர் சூர்யா, சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவைக் குடும்ப நிகழ்ச்சியாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தங்களுடைய சாதனைகளைப் பகிர்ந்துகொண்டு விருதுகளையும் உதவிகளையும் பெற்றுச் செல்வதைப் பார்க்கும்போது, அவர்கள் கடந்து வந்த தடைகள் வியப்பளிப்பதாகத் தெரிவித்தார். தந்தையின் வழிகாட்டுதலும் சமூக அக்கறையும் தங்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகவும் கூறினார்.

அகரம் ஃபவுண்டேஷன் கடந்த 20 ஆண்டுகளில் முதல் தலைமுறை மாணவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேரைச் சென்றடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட சூர்யா, கல்வி வாய்ப்புகள் தேவைப்படும் மாணவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு உதவுவதே அகரத்தின் முக்கிய நோக்கம் என்றார். மலைக் கிராமங்கள், கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

தனது திரையுலக அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட சூர்யா, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலும் அதை இறுதியாகக் கருதக் கூடாது என்று அறிவுறுத்தினார். திரைப்படங்களில் ஒரு காட்சியைச் சிறப்பாக எடுப்பதற்காகப் பலமுறை மீண்டும் முயற்சி செய்வதைப் போல, வாழ்க்கையிலும் “ஒன் மோர்” என்று சொல்லி மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்றார். மதிப்பெண்கள், கல்லூரி சேர்க்கை அல்லது முதல் வேலை என எதுவாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக முயற்சியைக் கைவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ச்சியான பயிற்சியும் ஒத்திகையும் ஒருவரை மேம்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், எந்தத் திறமையையும் ஒரே நாளில் அடைந்துவிட முடியாது; தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலமே அதில் சிறந்து விளங்க முடியும் என்றார். மேலும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் இயக்குநர்கள், எழுத்தாளர்கள், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரின் உழைப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வாழ்க்கையில் முன்னேறும்போது நமக்கு உதவியவர்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று கூறினார்.

சமூக வலைதளங்களில் வரும் ரீல்ஸ்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், சாதித்தவர்களின் பயணம், அனுபவங்கள் மற்றும் உழைப்பைப் பற்றிய தகவல்களைப் படித்தும் ஆராய்ந்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். “எப்போதும் ‘ஒன் மோர்’ என்று கேளுங்கள்; அதேபோல், குறைந்தபட்சம் ஒருவரையாவது உயர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை மிகவும் அழகானது. நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக மாற முடியும்” என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.