‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘ஜோ’, ‘ஆரோமலே’ உள்ளிட்ட படங்களில் ரசிகர்களின் மனதைத் தொட்ட மெலடிகளைக் கொடுத்த இசையமைப்பாளர் சித்து குமார், தற்போது யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இசை, மௌனமான ஒரு கதாபாத்திரத்தைப் போலப் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ எனப் பல பிரபலமான பாடல்களை வழங்கியவர் சித்து குமார். காதலையும் அதன் நுட்பமான உணர்வுகளையும் இசையின் வழியாக வெளிப்படுத்துவதில் தனித்துவம் கொண்ட இவர், தற்போது காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.
அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே இசை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்தும் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக சித்து குமார் தெரிவித்துள்ளார்.
‘ஹைக்கூ’ படத்தின் இசைப் பயணம் குறித்துப் பேசிய அவர், “யுவராஜ் சின்னசாமி இப்படத்தின் கதையைச் சொன்னபோதே, இசைக்கு இதில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன். அதேசமயம், சில சவால்களும் இருந்தன. காதல் கதைகள் இசையமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். மனதில் நிற்கும் இனிமையான மெலடிகளை உருவாக்கப் பல வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்குத் துணையாக இசை இருக்க வேண்டுமே தவிர, அவற்றைத் தாண்டி ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது.
‘ஹைக்கூ’ படத்தில் இசை என்பது திரைக்கதையின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தைப் போல, மௌனமாக இசை செயல்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதற்காகப் பல்வேறு இசை வடிவங்களையும் மாற்றங்களையும் முயற்சி செய்தோம். ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு இசைக் குறிப்பும் கதையின் உணர்வுகளுக்கும் அதன் நகர்வுக்கும் உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இதற்கான சுதந்திரத்தை வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.
உலகப் புகழ்பெற்ற புடாபெஸ்டில் இப்படத்தின் பின்னணி இசையைப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசை மேதைகள் தங்களது மகத்தான இசைப் படைப்புகளை உருவாக்கிய இடத்தில், எங்கள் படத்தின் பின்னணி இசையையும் பதிவு செய்தது சிறப்பான அனுபவமாக இருந்தது.
படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்தவர்களிடமிருந்து பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கிடைத்துவரும் வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் இப்படத்தின் இசையை உருவாக்கியிருக்கிறோம். ‘ஹைக்கூ’ படத்தைத் திரையரங்குகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அழகான இசை அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணீஷ் பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். தமிழக வெளியீட்டுப் பணிகளை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் பி. சக்திவேலன் மேற்கொண்டுள்ளார்.
