நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. இப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழம், பிரிவின் வலி, தந்தையின் அளவற்ற அன்பு ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் பல வந்துள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது. மகனுடன் நேரடியாகத் தனது அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாத தந்தையின் ஏக்கத்தையும், மகனின் மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசத்தையும் இப்பாடல் அழகாகப் பதிவு செய்கிறது.
மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள், முருகவேலின் குரல் என அனைத்தும் இணைந்து பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. தந்தையின் மனதில் புதைந்திருக்கும் அன்பையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் காட்சிகளுடன் இணைத்து வெளிப்படுத்தும் இப்பாடல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், படம் நிறைவடைவதற்கு முன்பே சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், OTT உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.
டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள ‘தகப்பன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ முதல் பாடல் படத்திற்கு மேலும் கவனம் ஈர்த்துள்ளது.
