தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

19

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா இணைந்து வழங்கும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம், சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை மற்றும் சாகசம் என வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ARK சரவன், தற்போது அதன் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து இயக்குநர் ARK சரவன் கூறுகையில், “முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் மீண்டும் இணைந்துள்ளனர். ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனி போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் கதையில் எப்படித் தொடர்புபடுகிறார்கள், எந்த இடத்தில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்குப் படத்தில் ஒரு சர்ப்ரைஸாக இருக்கும். முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அதே நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளன. இதனுடன் மேலும் பல சுவாரஸ்யமான அம்சங்களும் இருக்கின்றன.

டிரெய்லரில் படத்தின் சிறிய முன்னோட்டம் மட்டுமே வெளியாகும். ஆனால், முழுப் படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. முதல் பாகத்தில் நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. அதேபோல், இந்தப் பாகத்திலும் அவருடைய கதாபாத்திரம் வலுவானதாகவும், ஸ்பெஷலானதாகவும் இருக்கும். படம் வெளியாகும்போது ரசிகர்கள் அதை உணர்வார்கள்” என்றார்.

இப்படத்தில் ஆதி மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, தீபக் டி. மேனன் மற்றும் பி.வி. சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கலை இயக்கத்தை என்.கே. ராகுல் கவனிக்க, படத்தொகுப்பை திருமலை ராஜன் ஆர் மேற்கொண்டுள்ளார். வசனங்களை ராஜேஷ் கண்ணன் எழுதியுள்ளார். சண்டைப் பயிற்சியை பிசி ஸ்டன்ட்ஸ் அமைக்க, நடன அமைப்பை ரகு தாபா மேற்கொண்டுள்ளார். ஆடை வடிவமைப்பை ஏ. கீர்த்திவாசன் கவனித்துள்ளார். தயாரிப்பு நிர்வாகியாக எஸ்.எஸ். ஸ்ரீதரும், செயல் தயாரிப்பாளராக பி. மோகனும் பணியாற்றியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் பாகத்தின் ரசிகர்களுக்கு உற்சாகமான விருந்தாக அமைந்துள்ளதுடன், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.