விஜய் ஆண்டனியின் மனதை நெகிழ வைக்கும் தந்தை – மகள் பாசம்! – நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘அப்பா குட்டி’!
விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்கள், கதையின் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசம், அன்பு, தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மு. மாறன், “இது என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன. தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்களை இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன்.
விஜய் ஆண்டனி சாரிடம் கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். ‘கன்டென்ட்தான் கிங்’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள். அப்படிப்பட்ட நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்.
இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலில் உருவாக்கியிருக்கிறோம். என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தைப் பார்த்தேன். விஜய் ஆண்டனி சார் தனது படத்தின் எடிட்டிங் முடிந்தவுடன் என்னை அழைத்து, படத்தைப் பார்த்து கருத்துச் சொல்லச் சொல்வார். அப்படித்தான் நானும் என் மனைவியும் இந்தப் படத்தைப் பார்த்தோம். படம் முடிந்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. என் மனைவியும் அழுதுவிட்டார். அந்த அளவுக்கு படம் எங்களை உணர்வுபூர்வமாகப் பாதித்தது.
‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரம் சார் தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார். அந்தப் படத்தைப் போலவே ஒரு தந்தை தனது மகளுக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சார் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
இயக்குநர் மு. மாறன் சுமார் 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படத்தை உருவாக்கியிருக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். பேபி லிதன்யாவின் நடிப்பும், வசன உச்சரிப்பும் மிகவும் அருமையாக இருக்கின்றன.
தமிழ் தெரியாத சர்வதேச ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகளுக்குப் படத்தைத் திரையிட்டபோது, மொழி புரியாமலேயே அவர்கள் கதையுடன் உணர்வுபூர்வமாகப் பயணித்தனர். இடைவேளையின்போது கூட படத்தை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து பார்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். படம் முடிந்ததும் பாராட்டியதோடு, உடனடியாக வாங்குவதற்கான பேச்சுவார்த்தையையும் தொடங்கினர். Zee தொலைக்காட்சி நிறுவனமும் படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது.
படம் முடிந்து வெளியே வரும்போது உங்கள் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட வேண்டும்” என்றார்.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், “இந்தப் படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் நெருக்கமானது. கதையைக் கேட்டபோதே எனக்குப் பிடித்துவிட்டது. அம்மாவின் அன்பைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களையும் முயற்சிகளையும் பல நேரங்களில் நாம் கவனிப்பதில்லை.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள் என்று நம்புகிறேன். விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். பல பொறுப்புகளை ஏற்றிருந்தாலும் மிகவும் எளிமையாகவும், சக நடிகர்களுக்குச் சுதந்திரம் கொடுத்தும் பணியாற்றினார்.
இந்தப் படம் அப்பா – மகள் உறவை மட்டும் பேசும் வழக்கமான உணர்வுபூர்வமான படமாக இருக்காது. இதில் வித்தியாசமான கதைக்களம், வணிக அம்சங்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன” என்றார்.
பாடலாசிரியர் ஏகாதசி பேசுகையில், “இயக்குநர் மு. மாறனுடன் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் முதன்முதலில் பணியாற்றினேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றியும் மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன். குறிப்பாக, அப்பாவைப் பற்றிய பாடலை எழுதும்போது என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களும் அதில் கலந்திருந்தன. சிறு வயதிலேயே அப்பா வேறொரு திருமணம் செய்துகொண்டதால், அவருடைய அன்பையும் அரவணைப்பையும் நான் அனுபவித்ததில்லை. அப்பா என்ற உறவு எனக்கு எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாது. ஆனால், ஒரு எழுத்தாளராக இந்தப் படத்தின் அப்பா கதாபாத்திரத்தின் வலியை உணர்ந்து எழுத முடிந்தது. அந்த உணர்வுகளைப் பாடல் வரிகளாக வெளிப்படுத்த வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி சாருக்கும் இயக்குநருக்கும் நன்றி” என்றார்.
பாடலாசிரியர் அருண் பாரதி பேசுகையில், “என்னை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி சார். இந்தப் படத்திலும் ஓர் அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். ஏகாதசி எழுதிய அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. நான் பிளஸ் டூ படிக்கும்போது மண் சரிந்து விழுந்த விபத்தில் என் அப்பா உயிரிழந்தார். அந்தச் சமயத்தில் அவரைப் பற்றிக் கவிதை ஒன்றை எழுதினேன். அந்த நினைவுகள் இன்றும் என் மனதில் இருக்கின்றன. அப்பா – மகள் உறவு எவ்வளவு ஆழமானது என்பதை இந்தப் படத்தின் டிரைலரிலேயே உணர முடிகிறது” என்றார்.
நிகழ்வில் பேசிய நடிகர் மூணாறு ரமேஷ், இயக்குநர் மு. மாறன் அனைவரின் மனதையும் தொடும் வகையில் ஆழமான உணர்வுகளைக் கொண்ட கதையை உருவாக்கியிருப்பதாகப் பாராட்டினார். விஜய் ஆண்டனி எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பவர் என்றும், இப்படத்தின் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகை லிஸ்ஸி ஆண்டனி, விஜய் ஆண்டனியின் இசைக்கும் கதைத்தேர்வுக்கும் தான் மிகப்பெரிய ரசிகை என்றும், அப்பாவைப் பற்றிய பாடல் தன்னை மிகவும் நெகிழ வைத்ததாகவும் கூறினார். நடிகை ஹரிதா, தந்தையின் அன்பு மற்றும் குழந்தைப் பருவ உணர்வுகளை அழகாகப் பேசும் படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
நடிகை ஹரிப்ரியா, இது தனது முதல் திரைப்படம் என்றும், தன்னை நம்பி வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் மு. மாறனுக்கு நன்றி தெரிவித்தார். ஹரிப்ரியா விஸ்வநாதன், இயக்குநருடன் இது தனது இரண்டாவது படம் என்றும், முழுக் கதையையும் கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
நடிகர் ஜென்சன் திவாகர், முதல் 15 பக்கங்களிலேயே திரைக்கதை தன்னை ஈர்த்துவிட்டதாகவும், கிரைம் த்ரில்லராகத் தொடங்கும் கதை உணர்வுபூர்வமான அனுபவமாக மாறுவதாகவும் தெரிவித்தார். நடிகர் முருகானந்தம், இயக்குநர் மு. மாறனின் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பாராட்டினார். அப்பாவைப் பற்றிய பாடல் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில், படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டதாகவும், அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அழகான பாசத்தை இயக்குநர் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருப்பதாகவும் கூறினார். படத்தில் நடித்த சிறுமி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகப் பங்களித்திருப்பதாகவும், குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
விநியோகஸ்தர் பிரவீன் லால்வானி, அப்பா இல்லாத வாழ்க்கையின் வலியும் அப்பாவின் அருமையும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும் என்றும், அந்த உணர்வை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மிகவும் பொருத்தமான கதாநாயகன் என்றும் தெரிவித்தார்.
கலை இயக்குநர் ராஜா, படத்தின் இரண்டு காலகட்டங்களுக்கும் ஏற்ற வகையில் காட்சிகளின் தோற்றம், வண்ணங்கள் உள்ளிட்ட அம்சங்களில் பல புதுமைகளைச் செய்திருப்பதாகக் கூறினார். ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன், ஊட்டியின் இயற்கை அழகையும் கதைக்குத் தேவையான விஷுவல் அம்சங்களையும் இணைத்து உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
இயக்குநர் மந்திரமூர்த்தி, விஜய் ஆண்டனியின் கடின உழைப்பு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் குணம் மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பைப் பாராட்டினார். கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்புத் திறனையும் குறிப்பிட்டு வாழ்த்தினார்.
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையுடன், வித்தியாசமான திரைக்கதை மற்றும் வணிக அம்சங்களையும் இணைத்து உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.









