மர்மமான கட்டிடத்தில் தாயும் மகனும்… ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பு!

5

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், வழக்கமான ஹாரர் படங்களிலிருந்து மாறுபட்டு திகில், திரில்லர், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநரான அபய் சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே புதுமையான கதைக்களத்துடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், இருண்ட பின்னணியில் மர்மமான கட்டிடத்தின் சூழலில் அச்சத்துடன் மேலே நோக்கும் தாயும் மகனும் இடம்பெற்றுள்ளனர். போஸ்டரின் காட்சியமைப்பும், கதாபாத்திரங்களின் முகபாவனைகளும் படத்தின் ஹாரர் பின்னணியையும் கதையில் நிறைந்திருக்கும் மர்மத்தையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கேரளாவிலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் நடுத்தர வயது நபர் ஒருவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். இருவரும் புதிய வீட்டில் குடியேறிய பிறகு, அங்கு நிகழும் மர்மமான மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் திகிலூட்டும் நிகழ்வுகளும், அவற்றின் பின்னணியில் இருக்கும் மர்மங்களுமே இப்படத்தின் பிரதான கதைக்களமாக அமைந்துள்ளன.

திகிலூட்டும் ஹாரர் காட்சிகள், விறுவிறுப்பான திரில்லர் திருப்பங்கள் ஆகியவற்றுடன் குடும்ப நகைச்சுவை, காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன. பயம், சிரிப்பு, காதல், குடும்பப் பாசம் எனப் பல்வேறு உணர்வுகளை ஒருங்கிணைத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் கலேஷ் ராமானந்த் கதாநாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தென்னிந்தியத் திரையுலகின் மூத்த நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியான நடிகை கலாரஞ்சினி, கதாநாயகனின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைப்பதுடன் பின்னணி இசையையும் கவனிக்கிறார். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஐயப்பன் நாயர் எம்.எஸ். கவனிக்கிறார். புராஜெக்ட் டிசைனராக ஜாக்கி ஜான்சனும், விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு தீபு சந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

ஹேஷாம் அப்துல் வஹாப், வினீத் ஸ்ரீனிவாசன், அனிலா ராஜீவ் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். நவீன் கண்ணன், பீம் ஜி, நவீன் மாரார், ரஞ்சித் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சி.எம். சாதிக் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவைப் பணிகளையும், சரண் விநாயக் ஒலி எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்குநராக எஸ்.பி. நாகராஜ், தயாரிப்பு மேலாளராக கே. மகேந்திரன், ஆடை வடிவமைப்பாளராக கே. ராமு, ஒப்பனைக் கலைஞராக ரோகிணி கே.எஸ். ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நிறைவு செய்து, 2027 ஜனவரி மாதத்தில் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் கவனம் ஈர்த்துள்ள ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’, தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.