‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ படங்களைத் தொடர்ந்து வாலி மோகன் தாஸின் புதிய படம் – விறுவிறுப்பாக நடைபெறும் ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படப்பிடிப்பு!
‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘புரொடக்ஷன் நம்பர் 01’. இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குகிறார். படத்தின் கதை மற்றும் எழுத்துப் பணிகளை வாலி மோகன் தாஸ், உமர் எஸ். ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவுப் பணிகளைக் கவனிக்கிறார். இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
இயக்குநர் வாலி மோகன் தாஸ், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ரங்கோலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள நடிகர் ஷேன் நிகம், நிஹாரிகா கொனிடேலா மற்றும் கலைராசன் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து அவர் இயக்கும் புதிய திரைப்படம் என்பதால், ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், வித்தியாசமான கதைக்களம் மற்றும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது. இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் கூடுதல் விவரங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


