தமிழகம் முழுவதும் வலம் வரும் ‘அரிகொம்பன்’ யானை – பிரம்மாண்ட புரொமோஷன் டூரைத் தொடங்கி வைத்தார் கலைப்புலி எஸ். தாணு!

9

‘மேஜிக் பிக்சர்ஸ்’ தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட புரொமோஷன் டூரைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். யானையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகளை வித்தியாசமான முறையில் முன்னெடுக்கும் வகையில், ‘அரிகொம்பன்’ யானையின் பிரம்மாண்ட மாதிரி உருவம் தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்களைச் சந்திக்க உள்ளது.

இந்தப் புரொமோஷன் டூரின் ஒரு பகுதியாக, ‘அரிகொம்பன்’ யானையுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மேஜிக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்யும் ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் மொபைல் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. திரைப்பட விளம்பரத்தை ரசிகர்களின் நேரடிப் பங்கேற்புடன் கொண்டாட்டமாக மாற்றும் இந்த முயற்சி கவனம் ஈர்த்துள்ளது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம், 1980களில் வனப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் மற்றும் யானையைச் சுற்றி நிகழும் பரபரப்பான சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. யானையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ‘கும்கி’ போன்ற படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்துடனும் புதிய திரை அனுபவத்துடனும் உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ஆக்ஷன், திரில்லர், டிராமா எனப் பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் பரபரப்பான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையிலான கதையம்சத்தையும் இப்படம் கொண்டுள்ளது.

இப்படத்தில் மிதுன் மகேஸ்வரன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். அஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், சுப்பிரமணிய சிவா, ஆதிரா, மூ. ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களில் தேனிசைத் தென்றல் தேவா, ஜி.வி. பிரகாஷ் குமார், சின்மயி, வேல்முருகன் உள்ளிட்ட முன்னணி இசைக் கலைஞர்கள் பங்களித்துள்ளனர். கேரளத் திரையுலகைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ். அனிஷ் லால் ஒளிப்பதிவு செய்துள்ளார். வனப்பகுதியின் இயற்கை அழகு, மலைவாழ் மக்களின் வாழ்வியல் மற்றும் யானையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான காட்சிகளைத் தனது ஒளிப்பதிவில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, வெளியிட்டு வரும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘அரிகொம்பன்’ படத்தின் புரொமோஷன் டூரைத் தொடங்கி வைத்தது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அவரது வாழ்த்துகளுடன் தொடங்கியுள்ள இந்தப் பயணம், தமிழகம் முழுவதும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேஜிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.