தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த இசைஞானி இளையராஜா – மணிமண்டபம் அமைக்க ஸ்ரீகாந்த் தேவா கோரிக்கை!

5

மறைந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். மேலும், தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘Deva The Tribute’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி, நவம்பர் 20, 2026 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இசைஞானி இளையராஜா, தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், வன்னி அரசு, சென்னை மத்திய மாவட்ட தெற்கு செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான தமிழ்குமரன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர்கள் பி. வாசு, பா. ரஞ்சித், நடிகர்கள் ராதாரவி, பாண்டியராஜன், ஹிப் ஹாப் ஆதி, டி. இமான், ராமராஜன், ஜெய், சவுந்தர் ராஜா, ஒய்.ஜி. மகேந்திரன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் இசைக் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

விழாவின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய ஸ்ரீகாந்த் தேவா, கலந்துகொண்ட அமைச்சர்கள் முன்னிலையில் மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார். தனது தந்தை தேனிசைத் தென்றல் தேவாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், அவர் வாழ்ந்த பத்மநாபன் தெருவுக்கு தேவாவின் பெயரைச் சூட்ட வேண்டும், நவம்பர் 20ஆம் தேதியை ‘கானா தினம்’ என அறிவிக்க வேண்டும் என்பவையே அந்தக் கோரிக்கைகள்.

தேவாவின் இசைப் பயணத்தையும், தமிழ் திரையிசையில் அவர் ஏற்படுத்திய தனித்துவமான தாக்கத்தையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வெறும் பிறந்தநாள் கொண்டாட்டமாக மட்டுமின்றி, ஒரு இசை ஆளுமைக்குச் செலுத்தப்பட்ட மரியாதையாக அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திரையுலகப் பிரமுகர்களும் இசைக் கலைஞர்களும் தேவாவின் இசைப் பங்களிப்பை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.