தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ படத் தயாரிப்பு நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் புதிய தெலுங்கு – தமிழ் காதல் திரைப்படம்!
தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம், ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தெலுங்கு – தமிழ் இருமொழித் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘MAD’, ‘MAD Square’ திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் ராம் நிதின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிராத்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
‘பார்க்கிங்’, ‘TTT’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற பிராத்தனா நாதன், தற்போது ‘நின்ஜா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற தேஜு அஸ்வினி, அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ். சினிஷ் தொடங்கிய சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம், வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகி மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்று பெரும் கவனம் பெற்றது. இதற்கு முன்பு சத்யா, சந்தீப் கிஷன் நடித்த தெலுங்குத் திரைப்படமான ‘விவாஹ போஜனம்பு’, சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’, ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நின்ஜா’ உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது.
சஞ்சன் ஜி. தொடங்கிய ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. ‘சூப்பர் ஹீரோ’, ‘ஃபேமிலி ட்ரிப்’ உள்ளிட்ட படங்களுடன், ஜெயராம் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் இணைந்திருப்பதன் மூலம் தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பயணத்தைத் தொடங்குகிறது.
இந்தப் புதிய கூட்டணி குறித்து சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ் கூறுகையில், “எங்களின் அடுத்த தெலுங்கு – தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்காக ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். திறமையான நடிகர்கள் மற்றும் புதிய படைப்பாற்றல் கொண்ட தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து உருவாகும் சுவாரஸ்யமான காதல் கதை இது. புதிய திறமைகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் சினிமா மீதான ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளும் நபர்களுடன் கூட்டணி அமைப்பதை எப்போதும் வரவேற்று வருகிறோம். இந்தக் குழுவினரை ஒன்றிணைப்பதில் மகிழ்ச்சியடைவதுடன், ஒரு சிறப்பான படைப்பை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்களின் பயணத்தில் இது மற்றுமொரு உற்சாகமான தொடக்கம். பல்வேறு மொழிகளில் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படம் காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகத் தயாராகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 7’ எனத் தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
