“என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே நீ தான்…” – மகள் அல்லு அர்ஹாவுக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது மகள் அல்லு அர்ஹாவின் பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தந்தையும் மகளும் இணைந்திருக்கும் அழகான கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அல்லு அர்ஜுன், அதனுடன், “என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே நீ தான்… இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அல்லு அர்ஹா” என்று குறிப்பிட்டு தனது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தனது குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட அல்லு அர்ஜுன், குடும்பத்தினருடன் செலவிடும் மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படமும் வாழ்த்துச் செய்தியும் தந்தை – மகள் இடையிலான அழகான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஹாவின் பத்தாவது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் அல்லு அர்ஜுன் இலங்கைக்குச் சுற்றுலா சென்றுள்ளார். பிஸியான திரைப்பணிகளுக்கு மத்தியிலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கும், அவர்களுடன் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவதற்கும் அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
குணசேகர் இயக்கத்தில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் இளவரசன் பரதனாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அல்லு அர்ஹா. சிறுவயதிலேயே செஸ் விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய அவர், தனது ஐந்து வயதில் உலகின் இளம் செஸ் பயிற்சியாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்று நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்துள்ளார்.
தற்போது பத்தாவது வயதில் அடியெடுத்து வைத்துள்ள மகள் அல்லு அர்ஹாவுக்கு அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ள இந்த அன்பான வாழ்த்துப் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையில் தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் ரசிகர்களைக் கவரும் அல்லு அர்ஜுன், குடும்பத்தினரிடம் குறிப்பாகத் தனது குழந்தைகளிடம் காட்டும் பாசத்தின் மூலம் ஒரு அன்பான தந்தையாகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

