100 படங்களைக் கடந்த சாம் சி.எஸ். – ஒரே நாளில் ‘சத்யவான் சாவித்திரி’ ரிலீஸ், #RAPO23 டைட்டில் டீசர் வெளியீடு!

7

தமிழ் திரையுலகில் தனித்துவமான பின்னணி இசையாலும், வித்தியாசமான இசைக்கோர்வைகளாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதையின் தன்மைக்கு ஏற்ப புதிய இசை அனுபவத்தை வழங்கி வரும் அவர், தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகும் முன்னணி நட்சத்திரங்களின் பிரம்மாண்ட திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில், சாம் சி.எஸ். இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில், தெலுங்குத் திரையுலகின் எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி இயக்கி நடிக்கும் #RAPO23 திரைப்படத்தின் தலைப்பும் டீசரும் வெளியாகவுள்ளன. ஒரே நாளில் இந்த இரண்டு முக்கியமான திரைப்படங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் உருவாகியிருப்பது சாம் சி.எஸ். இசைப் பயணத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

ராம் பொதினேனி தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கும் #RAPO23 திரைப்படம், சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் பான் இந்தியப் படைப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிப்பதுடன், கதையை எழுதி இயக்கவும் செய்கிறார் ராம் பொதினேனி. ‘The Story of a Lone Wolf’ என்ற வாசகத்துடன் வெளியான புதிய போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கிருஷ்ணா பொதினேனி தயாரிக்கும் இப்படத்தில் சம்யுக்தா, ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை திருநாவுக்கரசு கவனிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ராம் பொதினேனியின் இயக்குநர் அறிமுகத்தில் சாம் சி.எஸ். இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படமும் அடுத்ததாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரத்தத்த தா’ ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தின் பின்னணி இசை மூலம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற சாம் சி.எஸ்., மூன்றாம் பாகத்திலும் தொடர்வது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் 2027 பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

மேலும், ‘கராத்தே பாபு’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மூலம் தனது 100-வது படத்தின் மைல்கல்லையும் அவர் கடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி வருகிறார். புஷ்கர் – காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் உள்ளிட்ட எதிர்பார்ப்புக்குரிய படங்களுடனும் அவரது பெயர் இணைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் தனது இசைப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார் சாம் சி.எஸ். ‘கைதி’, ‘வணங்கான்’ உள்ளிட்ட படங்களில் பின்னணி இசை மூலம் கதையின் உணர்வுகளையும் தீவிரத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர், காதல் மெலடிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த கன்னடத் திரைப்படமான ‘மஹாவதார் நரசிம்மா’ படத்திலும் அவரது பின்னணி இசை கவனம் பெற்றது.

நூறு படங்களைக் கடந்த பின்னரும் வேகம் குறையாமல், புதிய மொழிகள், புதிய கதைகள், புதிய கூட்டணிகள் எனத் தொடர்ந்து பயணித்து வருகிறார் சாம் சி.எஸ். நாளை வெளியாகும் ‘சத்யவான் சாவித்திரி’, ராம் பொதினேனியின் #RAPO23 படத்தின் டைட்டில் டீசர், தொடர்ந்து வரவிருக்கும் ‘டிமான்டி காலனி 3’ என அடுத்தடுத்து முக்கியமான படைப்புகள் அவரது இசைப் பயணத்தில் இடம்பெறுகின்றன. இதன் மூலம் இந்தியத் திரையுலகில் தனது அடுத்தகட்டப் பயணத்தை நோக்கி அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.