சரத்குமாரின் 177-வது திரைப்படமாக உருவாகும் ‘டாக்ஸி’ – பெர்ஜெயா குழுமம், ரேடான் மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிப்பு!

9

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகும் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெயினர் திரைப்படமான ‘டாக்ஸி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பெர்ஜெயா குழும நிறுவனங்களும் ரேடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் விழாவில் திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகரான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வின்சென்ட் டான், மஹா பெர்ஜெயா ஃப்ரோஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சப்ரினா சியாமலா பின்தி அப்துல்லா, புவான் ஸ்ரீ வோங் யோக் லியான் மற்றும் மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், கிரீன் பேக்கெட் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஷாஹுல் ஹமீத் பின் ஷேக் தாவூத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இயக்குநர் மணி ரத்னமும் இவ்விழாவில் பங்கேற்றார். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் தனாவின் புதிய முயற்சியைப் பாராட்டிய மணி ரத்னம், படக்குழுவினருக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் வரவேற்றார்.

இந்தியத் திரையுலகில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் சரத்குமாரின் 177-வது திரைப்படமாக ‘டாக்ஸி’ உருவாகிறது. குறிப்பாக, ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ள சரத்குமார், வெவ்வேறு தலைமுறை ரசிகர்களிடமும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார். அந்த வகையில், அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகும் ‘டாக்ஸி’ அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான படமாக அமையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகக் கவனம் பெற்ற இயக்குநர் தனா இப்படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, ஐ. நவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை சில்வா மாஸ்டர் வடிவமைக்கிறார். சங்கத் தமிழன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். ஹர்ஷினி ரவிச்சந்தர் ஆடை வடிவமைப்பாளராகவும், உத்ரா மீனாட்சி கொங்கரா நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

படைப்பாற்றல், அனுபவம் மற்றும் தயாரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெர்ஜெயா குழுமமும் ரேடான் மீடியா வொர்க்ஸ் நிறுவனமும் முதன்முறையாகத் திரைப்படத் தயாரிப்பில் இணைந்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘டாக்ஸி’ திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.