தந்தை – மகன் உறவின் உணர்வுகளைப் பேசும் ‘அப்பா உன் ஆராரிரோ’ – வெளியிட்டார் சாந்தனு பாக்யராஜ்!

9

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடித்துள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

தந்தையின் அன்பு, அவரது அருமை மற்றும் பிரிவினால் ஏற்படும் ஏக்கம் ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் மெலடிப் பாடலாக அமைந்துள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’, தந்தை – மகன் உறவின் ஆழமான உணர்வுகளை இசையின் வழியே அழகாக வெளிப்படுத்துகிறது.

இப்பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியுள்ளார். தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர்.

மித்துன் மாணிக்கம் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிஜேந்திரன் V படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். C. K. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள் நிறைந்த ஃபேமிலி டிராமா மற்றும் ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

மெக்கானிக் பிக்சர்ஸ் (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP (Millennials Movie Production LLP) சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ குடும்ப உறவுகளின் உணர்வுப்பூர்வமான மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் அதிகரித்துள்ளது.