மர்மம், விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ஆழமான உணர்வுகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக ‘சிக்னல் அட் 11.30’ உருவாகியுள்ளதாக இசையமைப்பாளர் டி. இமான் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னாடா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பின்னணி இசைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே படத்தைப் பார்த்த டி. இமான், அதன் கதைக்களம், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் தொழில்நுட்பத் தரம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் தனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்ததாகவும், திரில்லர் படத்துக்குத் தேவையான மர்மம், விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பங்கள் மட்டுமின்றி பார்வையாளர்களை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான கதையையும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குநர் மலர்விழி நடேசனின் காட்சியமைப்பு மற்றும் நடிகர்களின் நடிப்புக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையை உருவாக்குவதில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்துள்ள இப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்றும் டி. இமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பாராட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இப்படத்தை வழங்குகின்றனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷெரீப் நடன இயக்குநராகவும், ஆர். கலைவண்ணன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.