குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள், நட்பின் அழகு, கோடை விடுமுறையில் நிகழும் சுவாரஸ்யமான அனுபவங்கள் என அனைத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘சம்மர் ஹாலிடேஸ்’. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் சோனி லிவ் (Sony LIV) ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.
ஒரு காலத்தில் கோடை விடுமுறை என்றாலே தாத்தா, பாட்டி வீட்டுக்குச் செல்வதும், புதிய நண்பர்களைச் சந்திப்பதும், சிறு சிறு சாகசங்களில் ஈடுபடுவதும் குழந்தைகளுக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்தன. அந்த அழகான குழந்தைப் பருவ அனுபவங்களையும் நினைவுகளையும் மீண்டும் கண்முன் கொண்டுவரும் வகையில் ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த டிசம்பர் மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்களை வெளியிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சோனி லிவ் தனது முதல் வெளியீடாக இப்படத்தை வழங்குகிறது.
ஸ்ரீகர் நயன் எழுதி இயக்கியுள்ள இப்படம், அவர் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும். கோதாவரி பகுதியின் அழகிய கிராமப் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த நகரத்துச் சிறுவனான ஆர்.வி. (அருண் தேவ்), கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது பாட்டி (ஜெயசுதா) வசிக்கும் கிராமத்திற்குச் செல்கிறான். அங்கு பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டு வாழும் கே.வி. (ரோஹன் ராய்) என்ற உள்ளூர் சிறுவனைச் சந்திக்கிறான். வெவ்வேறு சூழல்களில் இருந்து வந்த இருவருக்கும் இடையே உருவாகும் நட்பு, அவர்களுக்குப் பல புதிய அனுபவங்களையும், சாகசங்களையும், வாழ்க்கைப் பாடங்களையும் வழங்குகிறது. சாதாரண விடுமுறையாகத் தொடங்கும் அவர்களது பயணம் மறக்க முடியாத அனுபவமாக மாறுவதே படத்தின் மையக்கருவாகும்.
குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனம், தலைமுறைகளுக்கு இடையிலான அன்பான உறவுகள், நட்பின் மகத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம், சிறிய தருணங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டறியும் வாழ்க்கையின் அழகை எடுத்துரைக்கிறது. குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களையும் சாகசங்களையும் அறிமுகப்படுத்தும் அதேவேளையில், பெரியவர்களும் தங்களது கோடை விடுமுறை நினைவுகளை மீண்டும் நினைவுகூரும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீகர் நயன் கூறுகையில், “குழந்தைப் பருவம், நட்பு மற்றும் வளர்ந்து வரும் காலத்தின் எளிமையான மகிழ்ச்சிகளைக் கொண்டாடும் திரைப்படம் ‘சம்மர் ஹாலிடேஸ்’. எனது முதல் திரைப்படம் என்பதால் இது என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. சோனி லிவ் தளத்தில் இப்படம் டிஜிட்டல் பிரீமியர் ஆவதன் மூலம் அதிகமான ரசிகர்களைச் சென்றடைவதில் மகிழ்ச்சி. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து இப்படத்தைப் பார்த்து, தங்களது குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் அனுபவித்து, சிறிய விஷயங்களில் மகிழ்ச்சியைக் கண்டறியும் அழகை உணர இது வாய்ப்பளிக்கும்” என்றார்.
நடிகை ஜெயசுதா கூறுகையில், “குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் புத்துணர்ச்சியான அனுபவமாக இருக்கும். அவர்களது அப்பாவித்தனமும் இயல்பான செயல்பாடுகளும் ‘சம்மர் ஹாலிடேஸ்’ படத்தை எனக்கு மேலும் சிறப்பான அனுபவமாக மாற்றின. தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பையும், வளர்ந்து வரும் காலத்தின் மகிழ்ச்சியையும் இப்படம் அழகாக வெளிப்படுத்துகிறது. சோனி லிவ் தளத்தில் வெளியாகும் இப்படம் குடும்பங்களை ஒன்றிணைப்பதுடன், அவர்களது சொந்தக் கோடை விடுமுறை நினைவுகளையும் மீண்டும் நினைவுபடுத்தும்” என்றார்.
தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தீரஜ் மொகிலினேனியும், VGB Films நிறுவனம் சார்பில் கிரி பாபு வல்லபனேனியும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ரோஹன் ராய், அருண் தேவ், குஷி, ஜெயசுதா, வாசுகி ஆனந்த், ராஜீவ் கனகலா, ஹர்ஷ வர்தன், ரமணா பார்கவ், ஹர்ஷினி கோடூரி, மகேஷ் சிந்தலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகளையும், நட்பின் மகத்துவத்தையும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் அனுபவத்தை வழங்கும் ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.