யோகி பாபுவின் அடுத்த படமான சன்னிதானம் பிஓ-வின் முதல் சிங்கிள் ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ வெளியீடு: ஆன்மீக உணர்வை தட்டியெழுப்பும் பாடல்!
சன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் ஆழமான குரலில் உணர்வுபூர்வமாக பாடப்பட்டுள்ள இந்த பாடல், மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர்-ன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இது படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மீக பயணத்திற்கு சரியான அடித்தளத்தை அமைத்துள்ளது.
புகழ்பெற்ற இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரால் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில், தற்போது தனித்துவமான திரையனுபவத்திற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள சன்னிதானம் பிஓ திரைப்படத்தை அமுத சாரதி இயக்கியுள்ளார்; அவரே படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். இப்படத்தை மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் மற்றும் ராமசாமி வேலு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுடன் மூத்த கலைஞர்களான சித்தாரா, பிரமோத் ஷெட்டி, முன்னார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் கதையோடு ஒன்றிப்போக செய்யும் பின்னணியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன்னிதானம் பிஓ படத்தின் மையக்கரு ஆழமான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. ஐயப்ப பக்தர்கள் சந்திக்கும் ஓர் எதிர்பாராத சம்பவத்தையும், அதனை தொடர்ந்து அவர்களின் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களையும் சுற்றியே இதன் கதை நகர்கிறது. நம்பிக்கை, மன உறுதி மற்றும் மனித உறவுகளில் வேரூன்றிய இந்த திரைப்படம், மனதை ஆழமாக தொடும் ஒரு திரையனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுதியுள்ளார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, பி.கே படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தொழில்நுட்ப குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டைப் பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல் வரிகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏறி வந்தோம் ஐயப்பா பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பயணம் ஒரு சிறப்பான ஆன்மீக உணர்வுடன் தொடங்கியுள்ளது; வரும் நாட்களில் படம் குறித்த பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள சன்னிதானம் பிஓ மே மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

