சரத்குமார் பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பு… காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

45

‘2018’, ‘ரேக்காசித்திரம்’, ‘மாளிகப்புரம்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி, தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தனது அடுத்த தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் ஆர். சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 12’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனியும், சரத்குமாரும் இணையும் முதல் திரைப்படம் என்பதால், இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி இயக்குகிறார். வித்தியாசமான கதையமைப்புகளுக்கும், புதுமையான திரைக்கதை சொல்லும் முறைக்கும் பெயர் பெற்ற அவர், இந்தப் படத்தில் சரத்குமாரை இதுவரை இல்லாத புதிய தோற்றத்திலும், வலுவான கதாபாத்திரத்திலும் திரையில் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி கூறுகையில், “சரத்குமார் சார் பிறந்தநாளில் எங்களது புதிய தமிழ் படத்தை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பல தலைமுறைகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் அவரது நடிப்பும், பன்முகத் திறமையும் எப்போதும் எங்களுக்கு உத்வேகமாக உள்ளது. வலுவான கதையுடன் உருவாகும் இந்தப் படத்தில் அவரது பங்களிப்பு மிகப்பெரிய பலமாக இருக்கும். இயக்குநர் கமல் பிரகாஷ் இந்தக் கதையை மிகுந்த நம்பிக்கையுடன் உருவாக்கியுள்ளார். ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை வழங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. முழு படப்பிடிப்பையும் 2026 நவம்பர்மாதத்திற்குள் நிறைவு செய்து, 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். கோகுல் பெனாய் ஒளிப்பதிவை கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன் ஆர், கலை இயக்கத்தை எஸ்.எஸ். மூர்த்தி மேற்கொள்கின்றனர். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை ‘சார்பட்டா பரம்பரை’, ‘தங்கலான்’படங்களின் எழுத்தாளர் தமிழ் பிரபா எழுதியுள்ளார். ஆடை வடிவமைப்பை தினேஷ் மனோகரன், மேக்கப்பை ரோனெக்ஸ் சேவியர் கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக கோபகுமார் ஜி.கே., நிறுவன தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ஷிபு ஜி. சுசீலன் பணியாற்றுகின்றனர்.

படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்த மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

காவ்யா ஃபிலிம் கம்பனியின் தரமான தயாரிப்பும், சரத்குமாரின் வலுவான நடிப்பும், இயக்குநர் கமல் பிரகாஷின் புதிய அணுகுமுறையும் இணையும் ‘புரொடக்ஷன் நம்பர் 12’, தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.