‘ட்ரெயின்’ இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா: மிஷ்கின் மீது பிரபலங்களின் பாராட்டு மழை – ஆகஸ்டில் வெளியாகும் என அறிவித்த தாணு

58

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பார்த்திபன், ராம், விக்னேஷ் சிவன், சசி, அருண் மாதேஸ்வரன், மடோன் அஷ்வின், பி.எஸ். வினோத் ராஜ், தமிழரசு பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். மேலும் நடிகர்கள் நாசர், கே.எஸ். ரவிக்குமார், நரேன், கணேஷ் வெங்கட்ராம், சிங்கம்புலி, அஜய் ரத்னம், யுகி சேது மற்றும் நடிகைகள் ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த், ப்ரீதி கரன், மாளவிகா சுந்தர், ஜனனி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, மிஷ்கினுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்ற விரும்பியதாகவும், இந்தப் படத்தின் கதையை கூட கேட்காமல் முழு நம்பிக்கையுடன் தயாரித்ததாகவும் தெரிவித்தார். படத்திற்காக மிகப்பெரிய ரயில் செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 63 நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவித்தார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், இந்தக் கதையை விஜய் சேதுபதியை மனதில் வைத்தே எழுதியதாகவும், இந்தக் கதாபாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்றும் புகழாரம் சூட்டினார். விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பும் நடிப்பும் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக கூறிய அவர், “படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்” என்று தனது படைப்பின் மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நடிகர் விஜய் சேதுபதி, மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். “இன்று அனைவரும் எனக்காக வரவில்லை; மிஷ்கின் சாருக்காக வந்திருக்கிறார்கள். அவர் ஒரு தனித்துவமான படைப்பாளி. ‘ட்ரெயின்’ எனக்கும் அவருக்கும் ஒரு ரொமான்டிக் பயணம்,” என்று கூறிய அவர், மிஷ்கின் மீது கொண்ட அன்பை வெளிப்படையாக தெரிவித்தார்.

நடிகர் நாசர், “மிஷ்கின் பற்றி மணிக்கணக்கில் பேச முடியும். அவரது தொழில்முறை அணுகுமுறை என்னை எப்போதும் வியக்க வைக்கிறது. இந்தப் படத்தில் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத காட்சிகள் இடம்பெறும்,” என்று பாராட்டினார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் ஒரு குழந்தை மனம் கொண்டவர் என்றும், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். நடிகை ஷ்ருதி ஹாசன், “மிஷ்கின் ஒரு கிரியேட்டிவ் மைண்ட். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்,” என்று தெரிவித்தார்.

இயக்குநர் வெற்றிமாறன், மிஷ்கின் எப்போதும் புதிதாக கற்றுக்கொள்ளும் படைப்பாளி என்றும், அவரது படங்களில் எதிர்பாராத தருணங்கள் ரசிகர்களை கவரும் என்றும் கூறினார். விஜய் சேதுபதி ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் ஆவார் எனவும் பாராட்டினார்.

இயக்குநர் ராம், கடந்த ஆறு ஆண்டுகளில் மிஷ்கின் சந்தித்த சவால்களை நினைவுகூர்ந்து, அவற்றை கடந்து மீண்டும் வலிமையாக திரும்பியிருப்பது பாராட்டுக்குரியது என்றார். இயக்குநர் அமீர், மிஷ்கின் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான பாணியை உருவாக்கியவர் என்றும், விஜய் சேதுபதி நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாக கூறினார்.

பார்த்திபன், விக்னேஷ் சிவன், சசி, மடோன் அஷ்வின், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட இயக்குநர்களும் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியைப் பாராட்டி, ‘ட்ரெயின்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று வாழ்த்தினர்.

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஷ்ருதி ஹாசன், நாசர், கே.எஸ். ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக மிஷ்கின் அறிமுகமாகும் இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.