போஸ்ட் புரொடக்ஷனில் முழுவீச்சில் ‘ஹைக்கூ’… பூஜையுடன் டப்பிங் பணியை தொடங்கிய படக்குழு!

8

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் அடுத்த கட்டமாக, சென்னையில் நடைபெற்ற எளிய பூஜை நிகழ்ச்சியுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கி வைத்தார்.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கியுள்ளன.

டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறுகையில், “‘ஹைக்கூ’ திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஒழுக்கத்துடனும் பணியாற்றியுள்ளனர். படப்பிடிப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதே உற்சாகத்துடன் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. படத்தை விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வர இரவு பகலாக பணியாற்றி வருகிறோம். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் சிறந்த தரத்தில் வழங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தனர்.

இப்படத்திற்கு ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், சக்தி பிரணேஷ் படத்தொகுப்பையும், சித்து குமார் இசையமைப்பையும் கவனித்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக, படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களம் மற்றும் உள்ளடக்கம் மீது அந்த நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது.

தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.