‘சூப்பர் ஹீரோ’ படத்தின் புதிய அப்டேட்… அடுத்தடுத்து வெளியாகும் புதிய போஸ்டர்கள்!

47

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், தனது சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை வழங்குகிறார். தரமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ்நிறுவனத்தின் ஷான்ஜன் ஜி இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

புதுமையான கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் கே.எஸ். சினிஷ், இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கியவர். அந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகியுள்ளது.

வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள அர்ஜுன் தாஸ், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், படத்தின் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சமீபகாலமாக நடிகராகவும் கவனம் ஈர்த்து வரும் சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் இணையும் காட்சிகள் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், ‘பலூன்’திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், திட்டமிட்ட அணுகுமுறையும் படக்குழுவினரின் பாராட்டைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. புதிய இயக்குநர்களை தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ராம் என்பவரையும் அறிமுகப்படுத்தியிருந்தார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஒன்ஸ் மோர்’உள்ளிட்ட படங்களில் தனது மெலோடியான இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், ‘சூப்பர் ஹீரோ’படத்திற்கும் இசையமைத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

முதல் பார்வைக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விரைவில் வெளியாகவுள்ள புதிய போஸ்டர்கள் படத்தின் கதைக்களம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.