இந்திய திரையுலகின் நூற்றாண்டு பெருமையை தன்னகத்தே சுமந்து நிற்கும் ஏவிஎம் நிறுவனம், தனது பாரம்பரிய பயணத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள ஏவிஎம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் என ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கி இந்திய சினிமாவின் வளர்ச்சியில் அழியாத தடத்தை பதித்துள்ளது.
இந்திய திரைப்படத் துறையில் பல முன்னோடி சாதனைகளை நிகழ்த்திய பெருமையும் ஏவிஎம் நிறுவனத்துக்கே சொந்தம். பின்னணிப் பாடகர் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘நந்தகுமார்’ (1938), இந்தியாவின் முதல் மொழிமாற்றுத் திரைப்படமான ‘ஹரிச்சந்திரா’ (1944), உதட்டசைவுக்கு ஏற்ப பாடலைப் பொருத்தும் Post Lip Synchronisation தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘ஸ்ரீ வள்ளி’ (1945), மகாகவி பாரதியாரின் பாடல்களை திரையில் பயன்படுத்தி பின்னர் அதன் உரிமையை தமிழக அரசுக்கு நன்கொடையாக வழங்கிய வரலாறு, பாடல்கள் இல்லாமல் உருவான ‘அந்த நாள்’ (1954), தேசிய தங்கப் பதக்கம் வென்ற ‘ஹம் பஞ்சி ஏக் டால் கே’ (1957), எம்.எஸ். விஸ்வநாதன் – இளையராஜா இணைந்து இசையமைத்த ‘மெல்லத் திறந்தது கதவு’ (1986), ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்ற ‘சம்சாரம் அது மின்சாரம்’ (1986), நடிகர்களையும் அனிமேஷனையும் இணைத்த இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), பிரம்மாண்ட தயாரிப்பின் அடையாளமாக அமைந்த ‘சிவாஜி’ (2007), இந்தியாவில் முதன்முறையாக Dolby Atmos தொழில்நுட்பத்தில் வெளியான ‘சிவாஜி 3D’ (2012) உள்ளிட்ட பல சாதனைகளை ஏவிஎம் படைத்துள்ளது.
ஏவிஎம் நிறுவனத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க பெருமை என்னவென்றால், பின்னாளில் மாநில அரசியலில் மிகப்பெரிய தலைவர்களாகவும், முதலமைச்சர்களாகவும் உயர்ந்த ஆறு முக்கிய ஆளுமைகள் இந்த நிறுவனத்தின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதுதான். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான அறிஞர் சி.என். அண்ணாதுரை, ‘ஓர் இரவு’ திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும், முத்தமிழறிஞர் டாக்டர் மு. கருணாநிதி ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தனது எழுத்தாற்றலால் தமிழ் சினிமாவில் அழியாத முத்திரை பதித்தவராகவும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் ‘அன்பே வா’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராகவும் ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்துள்ளனர். அதேபோல், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்குத் திரையுலகின் புராண நாயகனுமான டாக்டர் என்.டி. ராமாராவ், 1954 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் ஏவிஎம் தயாரித்த ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா, 1962 முதல் 1970 வரை ஏவிஎம் தயாரித்த நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், தற்போதைய தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய், 2009-ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தின் மூலம் ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்திய திரையுலகிலும், அரசியல் வரலாற்றிலும் தனித்துவமான இடத்தைப் பெற்ற இந்த ஆறு முதலமைச்சர்களின் திரைப்பயணத்தில் ஏவிஎம் நிறுவனமும் ஒரு முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது என்பது அதன் வரலாற்றுப் பெருமையை மேலும் உயர்த்துகிறது.
இந்த வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 2023-ஆம் ஆண்டு சென்னை வடபழனியில் ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ தொடங்கப்பட்டது. திரைப்பட வரலாற்றை பிரதிபலிக்கும் அரிய ஆவணங்கள், பழமையான படப்பிடிப்பு கருவிகள், திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய கார்கள் மற்றும் அரிய இயந்திரங்கள் உள்ளிட்டவை இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்களாக உள்ளன.
இந்த பாரம்பரியப் பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தற்போது ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ என்ற புதிய பிரம்மாண்ட அரங்கத்தையும் ஏவிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், திருமணம், திருமண வரவேற்பு, நிச்சயதார்த்தம், இசை வெளியீட்டு விழாக்கள், கார்ப்பரேட் மாநாடுகள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிரம்மாண்ட நிகழ்வுகளையும் நடத்த ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது.
விசாலமான வாகன நிறுத்துமிடம், நவீன மேடை வசதிகள், உலகத் தரத்திலான கட்டமைப்பு ஆகியவற்றுடன், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் சைவ மற்றும் அசைவ உணவு தயாரிப்பிற்கான தனித்தனி சமையலறைகள் அமைக்கப்பட்டிருப்பது இந்த அரங்கத்தின் தனிச்சிறப்பாகும்.
சினிமா வரலாற்றை உருவாக்கிய நிறுவனம் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ள ஏவிஎம், திரைப்பட தயாரிப்பைத் தாண்டி பாரம்பரியத்தை பாதுகாத்தல், புதிய தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச் செல்லுதல் மற்றும் உலகத் தரத்திலான நிகழ்வு அரங்கத்தை உருவாக்குதல் என தனது பயணத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இந்திய திரையுலகின் பெருமையை கொண்டாடும் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.