“எல்லா தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் படம்” – ‘மிஸ்டர் பாரத்’ மீது நம்பிக்கை தெரிவிக்கும் பாரத்
யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில், நடிகர் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் வழங்கும் இப்படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்தப் படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில், லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை கலந்த தோற்றத்தில் தயாரிப்பாளராக அறிமுகமான விதம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரைப்படத்தின் தலைப்பு குறித்தும் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் ‘மாஸ்டர் பீஸ்’ என பெயரிட திட்டமிடப்பட்டிருந்த இப்படத்திற்கு, அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்’ தேர்வு செய்யப்பட்டது. இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்ததாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெற்றிப்படமான மிஸ்டர் பாரத் தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோஸிடமிருந்து அதிகாரப்பூர்வ No Objection Certificate (NOC) பெற்று பின்னரே தலைப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறது. நடிகர் பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன் மற்றும் படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்கள்.
படம் குறித்து பேசிய நடிகர் பாரத், இதற்கு முன் ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்த நிலையில், தற்போது முதன்முறையாக ஹீரோவாக நடிப்பது கனவு நனவான தருணம் என மகிழ்ச்சி தெரிவித்தார். பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் தரச் சோதனை அதிகாரியாக பணிபுரியும், காதலைக்கூட உணராத அளவுக்கு அப்பாவியான இளைஞனாக அவர் நடித்துள்ளதாகவும், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த கதாபாத்திரம் தாத்தாவின் அரவணைப்பில் வளர்வதாகவும் கூறினார். தாத்தா வேடத்தில் ஆர். சுந்தர்ராஜன் நடித்திருப்பதுடன், அவரின் நகைச்சுவை பாணி படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மைகளை வடிவமைக்கும் டாய் டிசைனராக நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட மனக்காயங்கள் காரணமாக உறவுகள் மீது மாறுபட்ட பார்வை கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், பாரத்தின் தூய்மையான மனமும் அப்பாவித்தனமும் ஏற்படுத்தும் மாற்றங்களே கதையின் உணர்வுப்பூர்வமான மையமாக அமைகிறது.
இயக்குநர் நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள ‘மிஸ்டர் பாரத்’, நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளைக் காட்டிலும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களும், இயல்பான திரைக்கதையும் இப்படத்தின் பலமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை ஓம் நாராயண் மேற்கொண்டுள்ள நிலையில், இசையை பிரணவ் முனிராஜ் அமைத்துள்ளார். படத்தொகுப்பை திவாகர் டெனிஸ் கவனிக்க, கலை இயக்கத்தை பாவ்னா கோவர்தன் மேற்கொண்டுள்ளார். ஆடை வடிவமைப்பை நவா ரேம்போ ராஜ்குமார், ஒலி வடிவமைப்பை சுரேன் ஜி. மற்றும் அழகியகூத்தன், சண்டைக் காட்சிகளை கனல் வி. கண்ணன் மற்றும் கனல் எஸ். குகன் அமைத்துள்ளனர்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அப்டேட்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
