இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 96-வது பிறந்த நாள்: ரசிகர்கள் சங்கம் சார்பில் நாளை சிறப்பு நிகழ்ச்சிகள்
தமிழ் திரையுலகின் மறக்க முடியாத படைப்பாளிகளில் ஒருவரான கே. பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, கே. பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பில் நாளை (ஜூலை 9) பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ரசிகர்கள் சங்கத்தின் தலைவர் நாகா தலைமையிலும், பொதுச்செயலாளர் கவிதாலயா வீ. பாபு மேற்பார்வையிலும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள், காலை முதல் மதியம் வரை சென்னை நகரின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன.
காலை 9.00 மணி முதல் 9.30 மணி வரை, காவேரி மருத்துவமனை மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகே அமைந்துள்ள “கே. பாலசந்தர் போக்குவரத்து தீவு” பகுதியில், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் திருஉருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் அவரது மகள் புஷ்பா கந்தசாமி, மருமகன் கந்தசாமி, திரையுலக பிரபலங்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கே. பாலசந்தரின் திருஉருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், இனிப்புகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், மதியம் 12.00 மணி முதல் 12.30 மணி வரை, ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் அருகே கே. பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர்.
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் கலைப் பங்களிப்பையும், தமிழ் சினிமாவிற்கு அவர் அளித்த மகத்தான சேவையையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகளில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளதாக ரசிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.