Monster Mind Creations, KVN Productions மற்றும் Zee Music Company இணைந்து தயாரித்து வரும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆடியோ வடிவில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சியமைப்புடன் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டாக்ஸிக்’ படத்தின் உலகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த மியூசிக் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றும் இந்தப் பாடல், இருவருக்கும் இடையேயான அழகான காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான கெமிஸ்ட்ரியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்கவர் ஒளிப்பதிவு, உணர்வுகளைத் தூண்டும் கதை சொல்லல், மின்னல் வேக கிட்டார் இசை மற்றும் உயர்தர ஆர்கெஸ்ட்ரா இசை ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள ‘தபாஹி’, திரைப்படத்தின் மர்மம் நிறைந்த உலகிற்கான சிறப்பான முன்னோட்டமாக அமைந்துள்ளது. காதலின் தீவிரத்தையும், கட்டுப்பாடுகளை மீறும் உணர்வுகளையும் இசை மற்றும் காட்சிகள் மூலம் வெளிப்படுத்தும் இந்த மியூசிக் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாடல் வெளியீட்டிற்கு முன்பாக, தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் வித்தியாசமான புரமோஷனை மேற்கொண்டனர். “திருடப்பட்ட சில தருணங்களில் மட்டுமே வாழும் தடைசெய்யப்பட்ட காதலை என்னவென்று அழைப்பீர்கள்?” என்ற கேள்வியை அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டதுடன், கியாரா அத்வானி அதற்கு “தபாஹி”என்று பதிலளித்தார். பின்னர் Zee Music Company “Stay Tuned…” என்ற பதிவை வெளியிட்டதைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பாடல் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு இந்தி வரிகளை ராஜ் சேகர்எழுதியுள்ளார். தமிழ் பதிப்பிற்கு விக்னேஷ் சிவன், கன்னடத்திற்கு யோகராஜ் பட், தெலுங்கிற்கு ராமஜோகைய்யா சாஸ்திரி, மலையாளத்திற்கு ரஃபீக் அகமது ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது.
பாடல் குறித்து இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா கூறுகையில், “‘தபாஹி’ என்பது வழக்கமான காதல் பாடல் அல்ல. அது காதலின் கட்டுப்படுத்த முடியாத தீவிரத்தை வெளிப்படுத்தும் ஒரு இசைப் பயணம். ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப பிரம்மாண்டத்தையும், நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் உணர்த்தும் வகையில் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளேன்” என்றார்.
யாஷ் மற்றும் இயக்குநர் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதியுள்ள இந்தப் படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள இந்தப் படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், உலகம் முழுவதும் ஆகஸ்ட் 26, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.