ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட புதிய படம்; தயாரிப்பாளராகவும் கதாநாயகனாகவும் தமிழ்வாணன்!
Tam’s Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 2017-ஆம் ஆண்டு வெளியான ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஜ், இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஏலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை, அவர்களின் கலாச்சாரம், சமூக நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களின் பின்னணியில், அந்த மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் குரலை மாற்றமின்றி திரையில் பதிவு செய்யும் முயற்சியாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பொதுவுடைமை சிந்தனையின் தாக்கம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், அவர்களின் சமூகப் போராட்டங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் படைப்பாக இது அமைகிறது. கதை 2010-ஆம் ஆண்டு காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதும் உள்ள பின்தங்கிய சமூகங்கள் இன்று வரை சந்தித்து வரும் கல்வி, விளையாட்டு மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான சவால்களை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் திறமை இருந்தும், அதிகார அமைப்புகளால் அங்கீகாரமும் வாய்ப்புகளும் மறுக்கப்படும் மலைவாழ் மக்களின் போராட்டத்தை இப்படம் பேசுகிறது. வெற்றியை அடைந்த பிறகும், அவர்களின் வாழ்க்கை உண்மையில் எந்தளவு மாறுகிறது என்ற கேள்விக்கும் இப்படம் பதில் தேடுகிறது.
“வேற்றுமையில் ஒற்றுமை” என்று பெருமை பேசப்படும் நாட்டில், பல்வேறு வடிவங்களில் இன்னும் தொடரும் சமூக ஒடுக்குமுறையை எந்த மறைப்புமின்றி திரையில் பிரதிபலிப்பதே இந்தப் படத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தில் தமிழ்வாணனுடன் கதாநாயகியாக அபிராமி நடித்துள்ளார். மேலும் சி.எஸ்.கே. சரவணன், பிக்பாஸ் பிரவீன், ஜெய்பீம் படப் புகழ் மொசக்குட்டி, அகத்தியன், விஜயலட்சுமி, அருணாச்சலம், லயன் சுரேஷ், மைக்கேல், ஸ்ரீராம், கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனுடன், ஏலகிரி பகுதியைச் சேர்ந்த உண்மையான மலைவாழ் கிரிக்கெட் வீரர்களும் படத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.
இப்படத்திற்கு தேவசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோன்ஸ் ரூபெட் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களை பெருமாள் மற்றும் நவீன் எழுதியுள்ளனர். வசனங்களை பெருமாள் எழுதியுள்ளார். கலை இயக்கத்தை சத்யநாராயணன் கவனித்துள்ளார். நடனக் காட்சிகளை விஜய் மற்றும் ஆனந்த் குமார் அமைத்துள்ளனர். சண்டைக் காட்சிகளை லோகு வடிவமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பை பிரியா மேற்கொண்டுள்ள நிலையில், மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ் (AIM) கவனித்து வருகிறார்.
உண்மை சம்பவங்களின் பின்னணியில், சமூக நீதி, கல்வி, விளையாட்டு மற்றும் சமத்துவம் குறித்து வலுவான கருத்துகளை முன்வைக்கும் இந்த திரைப்படம், மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை யதார்த்தமாக பதிவு செய்யும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.



