‘என்ன விலை’ படத்தில் வழக்கறிஞராக மாறிய நிமிஷா சஜயன்… உண்மையான நீதிமன்ற அனுபவம் நடிப்பையே மாற்றியது!

7

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் திறமையான நடிகையாக தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நிமிஷா சஜயன், வித்தியாசமான மற்றும் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நீதிமன்றக் காட்சிகளில் அவர் வெளிப்படுத்திய யதார்த்தமான நடிப்பு கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய நிமிஷா சஜயன், இந்தக் கதாபாத்திரத்திற்காக தயாராகும் போது நேரடியாக நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு விசாரணைகளை கவனித்த அனுபவம், வழக்கறிஞர்களைப் பற்றிய தனது பார்வையை முழுமையாக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இதற்கு முன்பும் ஒரு திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். ஆனால் ‘என்ன விலை’ எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சஜீவ் பழூர் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு விசாரணைகளை நேரில் கவனிக்கச் சொன்னார். அதற்கு முன்பு வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து எனக்குள் ஒரு கற்பனை இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் பார்த்தபோது அவர்கள் பேசும் முறை, வாதிடும் விதம், அங்குள்ள சூழல் அனைத்தும் மிகவும் இயல்பாக இருந்தது. அந்த அனுபவமே நீதிமன்றக் காட்சிகளில் நான் வசனங்களை வெளிப்படுத்திய விதத்தை மாற்றியது” என்றார்.

மேலும், இயக்குநர் சஜீவ் பழூருடன் மீண்டும் இணைந்திருப்பது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிமிஷா சஜயன் கதாநாயகியாக அறிமுகமான விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்’திரைப்படத்திற்கு சஜீவ் பழூர் கதையாசிரியராக பணியாற்றியிருந்தார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதி இயக்கிய ‘என்ன விலை’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பது தனக்கு பெருமை அளிப்பதாக நிமிஷா சஜயன் கூறியுள்ளார்.

“சஜீவ் பழூரின் எழுத்து மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. இந்தப் படத்தின் மூலம் ஒரு இயக்குநராக அவரது பார்வையையும் திறமையையும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது முக்கியமான பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக அக்கறை கொண்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் கடலில் வீசும் நாணயங்களை எடுத்து வாழ்வாதாரம் நடத்தும் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டுள்ளது. வாழ்வாதாரப் போராட்டமாக தொடங்கும் இந்தக் கதை, பின்னர் நாடு முழுவதும் கவனம் ஈர்க்கும் சட்டப் போராட்டமாக மாறுகிறது.

இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் உடன் கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கலாமயா ஃபிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவையும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

மனித கண்ணியம், நீதிக்கான போராட்டம் மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘என்ன விலை’, நிமிஷா சஜயனின் மற்றுமொரு வலுவான நடிப்புப் படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.