சமுத்திரக்கனி, சசிகுமார், தினகரன் சிவலிங்கம் பாராட்டு… ‘அன்பே டயானா’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

31

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், நடிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு திரைப்படம் குறித்த அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பரிதாபங்கள் கோபி, இயக்குநர் பாரி இளவழகன் மீது இருந்த நம்பிக்கையால் கதையை முழுமையாகக் கேட்கும் முன்பே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டின் காட்சியமைப்பையும், முழு படக்குழுவினரின் அர்ப்பணிப்பையும் பாராட்டிய அவர், ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நடிகை ரோஜா, குடும்ப உறவுகள், காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட திரைப்படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளதாக கூறினார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களின் மனதைத் தொடும் என்றும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

Eraa Entertainment சார்பில் தயாரிப்பாளர் சத்யா கரிகாலன், இது வெறும் காதல் திரைப்படம் அல்ல; குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு படைப்பாக இருக்கும் என்று கூறி, இயக்குநர் மற்றும் படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினார்.

படத்தொகுப்பாளர் பார்த்தா, ‘ஜமா’ திரைப்படத்திற்குப் பிறகு பாரி இளவழகன் எழுதிய இந்தக் கதை பெரம்பூரை புதிய கோணத்தில் பதிவு செய்திருப்பதாகவும், சரியான நடிகர் தேர்வும், பரத் சங்கரின் இசையும், ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் பரத் சங்கர், பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை முறையை இயக்குநர் விவரித்த விதமே தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். படப்பணிக்கு முன்பே பெரம்பூரை பலமுறை சுற்றிப்பார்த்து அதன் சூழலை உணர்ந்ததாகவும், படத்தின் இசை மற்றும் பின்னணி இசையில் முழு திருப்தியுடன் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் தினகரன் சிவலிங்கம், பாரி இளவழகனின் விடாமுயற்சியும் சினிமா மீதான அர்ப்பணிப்பும் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக பாராட்டினார். டிரெய்லரில் தெரியும் இயல்பான கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுகள் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு, படத்தின் புரமோஷன் மற்றும் தொழில்நுட்ப தரம் அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும் கூறி, படம் வெற்றி பெற வாழ்த்தினார்.

நடிகர் சேத்தன், கதையை கேட்ட பிறகே தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகவும், படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் முழுமையான பயணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது இயக்குநர் பாரி இளவழகனின் எழுத்தின் மிகப்பெரிய பலம் என்றும், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக ‘அன்பே டயானா’ அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி, சேத்தன் போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் என்றும், பாரி இளவழகன் போன்ற இளம் இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவிற்கு புதிய கதைகளையும் புதிய பார்வைகளையும் கொண்டு வருகிறார்கள் என்றும் கூறினார். டிரெய்லரிலேயே ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான நேர்மறை உணர்வு தெரிகிறது என்றும், படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான சரவணன், இந்தப் படத்தில் முதலீட்டாளராக அல்ல, பாரி இளவழகன் மீதான நம்பிக்கையால் இணைந்திருப்பதாக கூறினார். ‘அன்பே டயானா’ குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய திரைப்படமாக இருக்கும் என்றும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து தரமான திரைப்படங்களை வழங்கி வருவதாகவும் பாராட்டினார்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், தனது வாழ்க்கைப் பயணத்தில் துணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, ‘அன்பே டயானா’ நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான திரைப்படம் என்றும், ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் படமாக இது அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கதாநாயகி ரம்யா ரங்கநாதன், டயானா கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று கூறினார். பெரம்பூரின் ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையை படம் அழகாக பதிவு செய்திருப்பதுடன், குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய படமாக இது உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் பாரி இளவழகன், இந்த திரைப்படம் ஒரு கூட்டுப் பயணத்தின் விளைவு என்றும், தயாரிப்பாளர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரின் ஒத்துழைப்பினால்தான் இந்த வடிவத்தை அடைந்துள்ளதாக கூறினார். பெரம்பூர் மக்கள் நீண்ட காலம் கொண்டாடும் திரைப்படமாக ‘அன்பே டயானா’ அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சசிகுமார், டிரெய்லரை பாராட்டியதுடன், படம் வெற்றி பெற்ற பிறகுதான் நன்றி சொல்ல வேண்டும் என்று படக்குழுவினரிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டார். ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் பாரி இளவழகன் தனது படைப்பாற்றலை நிரூபித்திருந்தார் என்றும், தற்போது முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக ‘அன்பே டயானா’வை உருவாக்கியிருப்பதால் இதிலும் அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை தெரிவித்தார். தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் மூலம் கவனம் பெற்றிருந்த ‘அன்பே டயானா’, தற்போது டிரெய்லர் வெளியீட்டின் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவையை இணைக்கும் இந்த திரைப்படம், பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் காதல் கதையாக உருவாகியுள்ளது.

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார்.

‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.