சிவராஜ்குமார் பிறந்தநாளில் வெளியான ‘Welcome to Wildlife’ ஃபர்ஸ்ட் லுக்… புதிய தோற்றத்தில் மிரட்டும் கன்னட சூப்பர் ஸ்டார்!
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா திரைப்படமான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் ‘திருடன் போலீஸ்’, தெலுங்கில் ‘Ninu Veedani Needanu Nene’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘Single’திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு, இந்தப் படத்தை இயக்குகிறார். பான்-இந்தியா அளவில் உருவாகும் இந்தப் படத்தை KVK Productions நிறுவனம் சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கிறார்.
சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் இணைந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
வெளியான போஸ்டரில், இதுவரை இல்லாத இளமையான மற்றும் வித்தியாசமான தோற்றத்தில் சிவராஜ்குமார் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது புதிய லுக், படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை மையமாகக் கொண்ட சாகசமும், பரபரப்பும் நிறைந்த கதைக்களத்தை படம் கொண்டிருக்கலாம் என்ற ஆர்வத்தையும் இந்த ஃபர்ஸ்ட் லுக் தூண்டியுள்ளது.
தனித்துவமான கதைக்களத்துடன் பிரம்மாண்டமாக உருவாகும் ‘Welcome to Wildlife’, சிவராஜ்குமாரின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு தொடக்க தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

