” காமராஜ் ” திரைப்படத்தை நாட்டுடைமையாக்கக் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்

33

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான ‘காமராஜ்’ திரைப்படத்தை தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அதற்கான ஈவுத் தொகையாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்று, திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.ஜே. பாலகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கி வெளியிட்டதாகவும், அந்தப் படம் பல தரப்பினரின் பாராட்டைப் பெற்றதுடன், காமராஜரைப் பற்றிய முதல் முக்கியமான திரை ஆவணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக பல்வேறு தரப்பினரிடம் நிதி உதவியும் வங்கிக் கடனும் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் பின்னர் ‘Welcome Back Gandhi’ மற்றும் ‘திருக்குறள்’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்த போதிலும், ‘காமராஜ்’ திரைப்படத்திற்காக வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் பெரும் பொருளாதார சுமையில் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ‘காந்தி’ திரைப்படத்திற்கு மத்திய அரசும், ‘அம்பேத்கர்’ திரைப்படத்திற்கு மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர அரசு இணைந்து நிதியுதவி வழங்கியதையும், ‘பெரியார்’ திரைப்படத்திற்கு தமிழக அரசு ஆதரவளித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரை தனது அரசியல் வழிகாட்டியாகக் கொண்டுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த கோரிக்கையை பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ள ஏ.ஜே. பாலகிருஷ்ணன், நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தை தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, உலகத் தமிழர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அதற்கான ஈவுத் தொகையாக ரூ.2 கோடி வழங்கப்பட்டால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கடன்களை அடைத்து, இந்த வரலாற்றுப் படைப்பை உருவாக்கியதற்கான மனநிறைவை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, இந்த உதவி உலகத் தமிழர்களிடையே முதலமைச்சருக்கு பெரும் பாராட்டைப் பெற்றுத்தரும் என்றும், பெருந்தலைவர் காமராஜரின் அருளாசிகள் எப்போதும் அவருக்கு கிடைக்க வாழ்த்துவதாகவும் தனது கோரிக்கையை நிறைவு செய்துள்ளார்.