மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஃபீல் மை லவ்’ ஃபர்ஸ்ட் லுக்; காதல், நகைச்சுவை கலந்த பான் இந்தியா படம்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களை விநியோகம் செய்து, பல பான் இந்தியா படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love). தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்காஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், மதுசூதனன் ராவ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவை கவனிக்க, ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இணைந்து இசையமைக்கின்றனர். ‘லவ்’, ‘கொலை சேவல்’ உள்ளிட்ட படங்களிலும், பல விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அஜய் மனோஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
இப்படத்தை ஹரி பிரகாஷ் எம் எழுதி இயக்கியுள்ளார். “வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், நகைச்சுவை, உணர்வுபூர்வமான உறவுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இளமைத் ததும்பும் காதல் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதால், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
