டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கி தயாரித்துள்ள, அதர்வா முரளி நடித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் உலகம் முழுவதும் வெளியிட்டுள்ள இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வில் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன், நடிகர் அதர்வா முரளி, இசையமைப்பாளர் எஸ். தமன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, நடிகர்கள் நட்டி, சின்னி ஜெயந்த், ரக்ஷன், சுதாகர், டிராவிட், மாதம்பட்டி ரங்கராஜ், நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன், கயாது லோகர், மோனிஷா, எஸ்.எஸ்.வி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
படத்தின் வெற்றி குறித்து பேசிய அனைவரும், ‘இதயம் முரளி’ ஒரு திரைப்படமாக மட்டுமல்ல, ஒரு குடும்பமாக உருவான அனுபவம் என்றும், படப்பிடிப்பு தளத்தில் உருவான நட்பும் ஒற்றுமையுமே திரையிலும் இயல்பாக பிரதிபலித்ததாகவும் தெரிவித்தனர். பலரும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் அர்ப்பணிப்பு, தயாரிப்புத் துணிச்சல் மற்றும் காட்சிகளில் அவர் காட்டிய நுணுக்கமான அணுகுமுறையை வெகுவாகப் பாராட்டினர்.
நடிகர் அதர்வா முரளி, தனது தந்தை மறைந்த நடிகர் முரளிக்கு இந்த திரைப்படத்தின் மூலம் அழகான மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் கனவையும் விடாமுயற்சியையும் பாராட்டிய அவர், படக்குழுவுடன் உருவான நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் என்றார்.
இசையமைப்பாளர் எஸ். தமன், இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்ததாகக் கூறினார். கதை மீது ஏற்பட்ட ஈர்ப்பே இப்படத்தில் இசையமைக்கவும், நடிகராகவும் பங்கேற்கத் தூண்டியதாக தெரிவித்த அவர், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார்.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் முழு படக்குழுவின் அர்ப்பணிப்பே எனக் குறிப்பிட்டார். தனது முதல் படைப்பிற்கே கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மிகப்பெரிய ஊக்கமாக இருப்பதாகவும், இப்படத்தின் மூலம் பல புதிய திறமைகள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருப்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, எழுத்தாளர் ரமணகிரிவாசன், திங் மியூசிக் நிறுவனத்தின் சந்தோஷ், எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் கிருஷ்ணா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த குழு ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பத் தரம் மற்றும் இசையின் பங்களிப்பு குறித்து பேசினர்.
மேலும், சின்னி ஜெயந்த், நட்டி, ரக்ஷன், சுதாகர், டிராவிட், மாதம்பட்டி ரங்கராஜ், ப்ரீத்தி முகுந்தன், கயாது லோகர், மோனிஷா, எஸ்.எஸ்.வி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தயாரிப்புக் குழுவிற்கு நன்றி தெரிவித்து, இந்த திரைப்படம் தங்களது திரைப்பயணத்தில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளதாகக் கூறினர்.
உணர்வுபூர்வமான காதல், நட்பு மற்றும் நினைவுகளை மையமாகக் கொண்டு உருவான ‘இதயம் முரளி’, வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் பேராதரவைப் பெற்று, விமர்சகர்களின் பாராட்டுகளையும் குவித்து, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.





