‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தை நடிகர் ஜீவா நடிப்பில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இன்று மதுரையில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. இதில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனை நிறைந்த கதையில் நடிக்கிறார். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா–மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப உணர்வுப் படமாக உருவாகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை K.B. நந்தபாலன், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் கவனிக்கின்றனர். ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்ள, புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது.
பூஜை நிகழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
வலுவான கதைக்களம், திறமையான நடிகர்கள், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குடும்ப உணர்வுப் படமாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


