‘கான் சிட்டி’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… ரசிகர்கள், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த அர்ஜுன் தாஸ் – ஹரிஷ் துரைராஜ்!
அர்ஜுன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர், திரைப்படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பல உணர்வுபூர்வமான தருணங்களும் இடம் பெற்றன.
சந்தோஷ் மாஸ்டர்
நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசுகையில், இயக்குநர் ஹரிஷ் துரைராஜின் விடாமுயற்சியைப் பாராட்டினார். படம் தொடங்கிய நாள் முதல் அவருடன் பயணித்த அனுபவத்தை பகிர்ந்த அவர், மிகப்பெரிய விஷன் கொண்ட இயக்குநராக ஹரிஷ் இன்னும் உயரங்களை அடைவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். பிஸியான அட்டவணையிலும் முழு அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்த அர்ஜுன் தாஸ், மூத்த நடிகை வடிவுக்கரசி, தயாரிப்பு குழு மற்றும் எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
எடிட்டர் அருள் மோசஸ்
படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்புக்கு ரசிகர்களும், ஊடகங்களுமே காரணம் என்று கூறிய அருள் மோசஸ், “வேர்ட் ஆஃப் மவுத்” மூலம் படம் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இறுதிக்கட்ட பணிகளில் இணைந்து உழைத்த உதவியாளர்கள் மற்றும் முழு தொழில்நுட்பக் குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
விநியோகஸ்தர் ஐயப்பன்
இயக்குநர் ஹரிஷின் படைப்பை பாராட்டிய அவர், அர்ஜுன் தாஸ் இனி குடும்ப ரசிகர்களையும் கவரும் படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் கல்கி ராஜா
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்கிய இயக்குநர் ஹரிஷுக்கும், தயாரிப்பாளர் அஜந்தாவுக்கும் நன்றி தெரிவித்த கல்கி ராஜா, வடிவுக்கரசியுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்ததாக கூறினார்.
நடிகர் ரகு
“கான் சிட்டி” படப்பிடிப்பு முழுவதும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறிய ரகு, அர்ஜுன் தாஸ், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம் என்றார். குறிப்பாக ஆறு மணி நேரத்துக்கும் அதிகமான காட்சிகளை எடிட்டிங் செய்து இரண்டு மணி நேர படமாக மாற்றிய இயக்குநர் மற்றும் எடிட்டரின் உழைப்பை பாராட்டினார்.
நடிகர் ஆதித்யா கதிர்
இயக்குநர் ஹரிஷின் கடின உழைப்பே இந்த வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிட்ட ஆதித்யா கதிர், வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அனைத்து நடிகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்த அவரது பெருந்தன்மையை பாராட்டிய அவர், ரஜினிகாந்த் போல் மிகப்பெரிய உயரத்தை அர்ஜுன் தாஸ் அடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.
இமான் அண்ணாச்சி
25-வது நாள் வெற்றியை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய இமான் அண்ணாச்சி, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையை ஒருங்கிணைத்து சிறந்த படைப்பாக மாற்றிய இயக்குநர் ஹரிஷை பாராட்டினார். இந்த வெற்றி இன்னும் பல வெற்றிகளுக்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்றார்.
நடிகர் சதா
தனது முதல் திரைப்படமே இவ்வளவு அன்பைப் பெற்றிருப்பது உணர்ச்சிவசப்பட வைத்ததாக கூறிய சதா, படம் வெளியான பிறகு பல நகரங்களில் ரசிகர்கள் அளித்த வரவேற்பை பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் ஒளிப்பதிவு, இசை, டப்பிங், சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பப் பணிகளையும் கற்றுக்கொண்ட அனுபவம், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்ததாக தெரிவித்தார்.
குழந்தை நட்சத்திரம் அகிலன்
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன்
படத்தை மக்களிடம் கொண்டு சென்ற ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்த மோகன் ராஜன், இயக்குநர் ஹரிஷின் முதல் வெற்றி இது மட்டுமே என்றும், அவர் இன்னும் உயரங்களை அடைவார் என்றும் கூறினார். “ஏமாற்றாதே… ஏமாறாதே…” மற்றும் “கண்ணா ப்ரோ…” பாடல்களின் வரிகளை குறிப்பிட்டு, அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார். “ஃப்ராடு பையலே” பாடல் படத்தில் இடம்பெறாததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்
“கான் சிட்டி” திரைப்படம் இன்னும் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்த்ததாக கூறிய ஷான் ரோல்டன், இயக்குநர் ஹரிஷின் கதை சொல்லும் திறன், திரைக்கதை அமைப்பு மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நினைவில் நிற்கும் தருணங்களை உருவாக்கிய விதம் அவரை ஆச்சரியப்படுத்தியதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் பான் இந்தியா, பான் வேர்ல்ட் தரத்தில் படைப்புகளை வழங்கும் இயக்குநராக ஹரிஷ் உருவெடுப்பார் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்தார். எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர், சதா உள்ளிட்டோரின் பங்களிப்பையும் பாராட்டினார்.
நடிகர் அர்ஜுன் தாஸ்
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்த அர்ஜுன் தாஸ், படம் வெளியான முதல் காட்சிக்குப் பிறகு கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருந்ததாக கூறினார்.
“படம் எப்படி இருக்கும் என்ற பதற்றத்தில் நாங்கள் இருந்தோம். ஆனால் முதல் காட்சி முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சிரித்த முகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. அதன் பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை கொண்டாடியதை பார்த்தபோது, இந்த வெற்றிக்கான முழு பாராட்டும் இயக்குநர் ஹரிஷுக்கே சேரும் என்று நினைத்தேன்,” என்றார்.
இந்தக் கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் ஹரிஷுக்கு நன்றி தெரிவித்த அவர், “இந்தப் படத்தில் இவ்வளவு திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அனைவரின் பெயர்களும் போஸ்டர்களில் இடம்பெற வேண்டும் என்று நான் விரும்பியது, இந்தப் படம் ஒரு குழுவின் வெற்றி என்பதால்தான்,” என்றார்.
குழந்தை நட்சத்திரம் அகிலனை பற்றி பேசுகையில், “இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை ‘அப்பா’ என்று அழைத்தபோது ஏற்பட்ட உணர்வு மிகவும் புதிதாக இருந்தது. உன்னுடன் மீண்டும் பணியாற்ற வேண்டும்,” என்று கூறினார்.
நடிகர் சதாவை பாராட்டிய அவர், “இந்தப் படம் வெளியான பிறகு உனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நான் சொன்னேன். இன்று அது உண்மையாகியிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி,” என்றார்.
மோகன் ராஜன், ஷான் ரோல்டன், யோகி பாபு, வடிவுக்கரசி, பரத், ஐயப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த அர்ஜுன் தாஸ், குறிப்பாக வடிவுக்கரசியின் நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாக பாராட்டினார்.
இறுதியாக, “இந்த அன்பும் ஆதரவும் எனக்கு இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்ற பொறுப்பை அளித்துள்ளது. ரசிகர்கள், குடும்ப பார்வையாளர்கள், குழந்தைகள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றி,” என்று உரையை நிறைவு செய்தார்.
நடிகை வடிவுக்கரசி
“இன்று நான் உங்கள் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்ததுபோல்,” என்று உணர்ச்சிபூர்வமாக பேசிய வடிவுக்கரசி, தனது உடல்நலக்குறைவின் போது உதவிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
“கான் சிட்டி” படத்தின் மூலம் தன்னை புதிய கோணத்தில் காட்டிய இயக்குநர் ஹரிஷுக்கு நன்றி தெரிவித்த அவர், “எனக்கு இன்னும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எழுதுங்கள். அதுதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை உருவாக்கும்,” என்று ஊடகங்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
வி.டி.வி. கணேஷ்
படம் வெற்றி பெற்ற பிறகு இயக்குநர் ஹரிஷ் வாக்குறுதியை காப்பாற்றி ஐஃபோன் பரிசளித்த சம்பவத்தை பகிர்ந்த அவர், ஹரிஷின் நேர்மையையும் பல்துறை திறமையையும் பாராட்டினார். நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத் தயாராக இருப்பதை “கான் சிட்டி” நிரூபித்துள்ளதாக கூறினார்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்த ஹரிஷ், கொரோனாவிற்கு பிறகு சிறிய படங்களை வெற்றி பெறச் செய்வது மிகவும் கடினமான சூழல் என்றாலும், நல்ல உள்ளடக்கத்தை மக்களிடம் கொண்டு சென்ற ஊடகங்களால்தான் “கான் சிட்டி” இந்த வெற்றியை பெற்றதாக கூறினார்.
திரைப்படத்தை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், உலகளாவிய வெளியீட்டை ஏற்பாடு செய்த நிறுவனங்கள், Netflix, Delta Studios உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
வடிவுக்கரசியைப் பற்றி பேசுகையில், “60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்தும் இன்னும் அதே பசியுடன் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லும் ஒரு கலைஞருடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம். ‘நான் இறந்தாலும் படப்பிடிப்பு தளத்தில்தான் இறக்க வேண்டும்’ என்ற அவர் சொன்ன வார்த்தை என்னை கண்கலங்க வைத்தது,” என்றார்.
அன்னா பென், யோகி பாபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பையும் பாராட்டிய அவர், “ஒரு நடிகராக மற்ற கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க அர்ஜுன் தாஸ் தயாராக இருந்தார். அதனால்தான் இந்தப் படம் முழுமையான படைப்பாக உருவானது,” என்றார்.
இறுதியாக, ரசிகர்கள், பத்திரிகை, ஊடகங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், “இந்த வெற்றி எங்கள் முழு குழுவின் வெற்றி,” என்று கூறினார்.
ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை, கடன் சுமை மற்றும் எதிர்பாராத சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் சொல்லியிருக்கும் ‘கான் சிட்டி’, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.



