விமான நிலையங்களில் பசுமை ஆற்றல், நகர்ப்புற வெள்ள மேலாண்மை குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய எம்.பி. எல்.கே. சுதீஷ்; மத்திய அரசு விரிவான விளக்கம்

53

மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ், நாட்டின் விமான நிலையங்களில் பசுமை ஆற்றல் பயன்பாடு மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை தொடர்பாக மாநிலங்களவையில் முக்கிய கேள்விகளை எழுப்பினார். இதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தது.

விமான நிலையங்களில் பசுமை ஆற்றல் பயன்பாடு 

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோகோல், நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து விமான நிலையங்களும், புதிதாக உருவாக்கப்படும் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களும் கட்டம் கட்டமாக கார்பன் நியூட்ரல் மற்றும் நெட்-ஜீரோ இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்தார்.

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் பிற விமான நிலைய நிர்வாகங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தற்போது நாடு முழுவதும் 106 விமான நிலையங்கள் (99 AAI விமான நிலையங்கள் மற்றும் 7 AAI அல்லாத விமான நிலையங்கள்) 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைபயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்த மின்சாரம் பெரும்பாலும் சூரிய மின்சாரம் மற்றும் பசுமை மின்சார கொள்முதல் மூலம் பெறப்படுகிறது.

மேலும், பிரதம மந்திரி சூர்யா கர் (PM Surya Ghar) திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், முக்கிய விமான நிலையங்களின் கட்டண நிர்ணயத்தில் பசுமை ஆற்றல் முதலீடுகளும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

நகர்ப்புற வெள்ள மேலாண்மை குறித்து விளக்கம் 

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெள்ள பாதிப்புகளை குறைக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எல்.கே. சுதீஷ் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் தோகன் சாஹு பதிலளித்தார்.

நகர்ப்புற வெள்ள மேலாண்மை என்பது மாநில அரசுகளின் பொறுப்பாக இருந்தாலும், அதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

AMRUT திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ₹3,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் 838 மழைநீர் வடிகால் திட்டங்கள்செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் AMRUT திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், AMRUT 2.0 திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான பூங்காக்கள், பசுமை வெளிகள் மற்றும் நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சென்னைக்கு ₹500 கோடி ஒதுக்கீடு

தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் Urban Flood Risk Management Programme (UFRMP)திட்டம் குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தலா ₹500 கோடிஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டத்தில் இரண்டாம் நிலை நகரங்களும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சென்னையில் நீர்த்தேக்கங்களை நிகழ்நேரத்தில் கண்காணித்து, கனமழை காலங்களில் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் வகையில் SCADA (Supervisory Control and Data Acquisition) தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், விமானப் போக்குவரத்து துறையில் பசுமை ஆற்றல் பயன்பாட்டை விரிவுபடுத்துவதும், நகர்ப்புறங்களில் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் மத்திய அரசின் முக்கிய முன்னுரிமைகளாக இருப்பதாக மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட பதில்கள் மூலம் தெரியவந்துள்ளது.