நோவா சென்டினியோ – ஜேசன் மோமோவாவுடன் வித்யுத் ஜமால்… ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லர் ரசிகர்களை மிரளவைத்தது!

6

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’தற்போது பிரம்மாண்டமான ஹாலிவுட் திரைப்படமாக உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற தல்சிம் (Dhalsim) கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

1993-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் இணைந்து ஆபத்தான பயணத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மர்மம் நிறைந்த சுன்-லி (கலினா லியாங்), அடுத்த World Warrior Tournament-இல் பங்கேற்க அவர்களை அழைக்கிறார். ஆனால் அந்தப் போட்டியின் பின்னால் உலகையே அச்சுறுத்தும் ஆபத்தான சதித்திட்டம் ஒன்று மறைந்திருப்பதை அவர்கள் பின்னர் அறிகிறார்கள்.

இந்த சதித்திட்டம் ரியூ மற்றும் கெனை ஒருவருக்கு ஒருவர் எதிராக மோத வைப்பதோடு, அவர்களின் கடந்தகால இருண்ட நினைவுகளையும் மீண்டும் எதிர்கொள்ளச் செய்கிறது. வெற்றி அல்லது தோல்வி என்ற நிலையைத் தாண்டி, உயிர் பிழைப்பே மிகப்பெரிய சவாலாக மாறும் இந்தக் கதையில், ஒவ்வொரு மோதலும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கிடாவோ சகுராய் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’, ரசிகர்கள் விரும்பும் ஹடூகன் (Hadouken), ரவுண்ட்ஹவுஸ் கிக், அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் பிரபல கதாபாத்திரங்களை நவீன தொழில்நுட்பத்துடன் வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறது. வெளியான டிரெய்லர், அதிரடி ஆக்ஷன், பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் பரபரப்பான சண்டைக் காட்சிகளால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக, இந்தியாவின் முன்னணி ஆக்ஷன் நட்சத்திரமான வித்யுத் ஜமால் ஹாலிவுட்டில் தல்சிம் கதாபாத்திரத்தில் தோன்றுவது இந்திய ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கேம் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.