‘வெள்ளித்திரை – சின்னத்திரை விருதுகள் இனி ஆண்டுதோறும்’… பிஆர்ஓ யூனியன் பதவியேற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியனின் (PRO Union) 2026-28 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததுடன், திரைப்படத் துறைக்கு பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
புதிய நிர்வாகிகளாக பி. யுவராஜ் தலைவராகவும், என். விஜய முரளி செயலாளராகவும், வி.கே. சுந்தர்பொருளாளராகவும், எஸ். புவனேந்திரன், எஸ். சதீஷ்குமார் துணைத் தலைவர்களாகவும், ஜி. பாலசுப்பிரமணியன் (பாலன்) மற்றும் ஆர். உதயகுமார் இணைச் செயலாளர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், தயாரிப்பாளரும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், ஜே.எம். பஷீர்உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் பேசுகையில், திரைப்படத் துறையில் பிஆர்ஓ சங்கம் தவிர்க்க முடியாத முக்கியமான அமைப்பு என்று குறிப்பிட்டார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சொந்த அலுவலகம் அமைக்க தமிழக அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்றும், 2015 முதல் 2022 வரை நிலுவையில் உள்ள சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான மானியங்களை விரைவில் வழங்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
சிறப்பு விருந்தினராக உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்களின் பங்களிப்பை பாராட்டியதுடன், “வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும். மாண்புமிகு முதலமைச்சரின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டவர்களின் பலத்த கைதட்டலை பெற்றது.
தொடர்ந்து பேசிய அமைச்சர், திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பிஆர்ஓக்களின் பங்களிப்பை விரிவாக பாராட்டினார். திரைப்பட உலகில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி முக்கியத்துவம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிஆர்ஓக்கள் தான் திரைப்பட உலகின் “ரத்த நாளங்கள்” என புகழாரம் சூட்டினார்.
திரைப்படப் படப்பிடிப்புகளுக்கான அனுமதிகளில் எந்தவித முறைகேடும் நடக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், “யார் கேட்டாலும் அனுமதிக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம்; உங்களுடன் தமிழக அரசு நிற்கிறது” என உறுதியளித்தார்.
மேலும், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், நிலுவையில் உள்ள திரைப்பட மானியங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திரைப்படத் துறையில் உள்ள ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அரசு மேற்கொண்டு வரும் சிறப்பு திரையிடல் முயற்சிகள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். உலக சினிமா திரையிடப்பட்டபோது குழந்தைகள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி தன்னை நெகிழச் செய்ததாகவும், இந்த முயற்சி தொடர்ந்து மாதந்தோறும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, “திரைக்கலை எனக்கு வாழ்க்கையை கொடுத்தது. அந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், திரையுலகின் நலனுக்காக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செயல்படுவேன்” என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.
புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற இந்த விழா, திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்களின் பங்களிப்பை கௌரவித்ததோடு, தமிழக அரசின் புதிய அறிவிப்புகளாலும் திரையுலகில் முக்கிய கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்தது.








